Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேறு மதத்தை சேர்ந்தவர் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய இந்து அமைப்பினர் எதிர்ப்பு: நாகையில் பரபரப்பு

ஜுலை 03, 2020 12:39

நாகை: நாகையில் வேறு மதத்தை சேர்ந்தவர் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் செண்பகராயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ஜெகதாம்பாள் (85). இவரது மகன் லோகேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார். இந்த நிலையில் ஜெகதாம்பாள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது உடலை அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் வேறு மதத்திற்கு மாறியதால் இங்கு உடலை அடக்கம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நாகை பகுதியை சேர்ந்த சிலர் பாதிரியார்கள் ஸ்டீபன் டேனியல் ஆசீர்வாதம் ஆகியோர் உதவியுடன் ஜெகதாம்பாள் உடலை செண்பகராயநல்லூரில் இருந்து நாகை- செல்லூர் சாலையில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து வந்தனர். அங்கு உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

தகவல் அறிந்த சிவசேனா கட்சி மாநில செயலாளர் சுந்தரவடிவேலன் பா.ஜ.க. மாவட்ட தலைவர் நேதாஜி அகில இந்திய இந்து வளர்ச்சி கழக தஞ்சை மண்டல பொறுப்பாளர் சுரேஷ் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ஆதிமுருகன் உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாகை-செல்லூர் சாலையில் உள்ள சுடுகாட்டிற்கு வந்து உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிரியார்கள் ஸ்டீபன் டேனியல் ஆசீர்வாதம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாகையில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கல்லறையில் நல்லடக்கம் செய்ய உடலை கொண்டு செல்வதற்கு செண்பகராயநல்லூர் கிராம நிர்வாக அலுவலரிடம் கடிதம் பெற்றிருப்பதாக கூறினர். இந்துக்கள் சுடுகாட்டில் கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் செய்தால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவே கிராம நிர்வாக அலுவலர் குறிப்பிட்டப்படி கிறிஸ்தவர்களின் கல்லறையில் அடக்கம் செய்துகொள்ளுமாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து லோகேந்திரன் உள்ளிட்ட பலர் ஜெகதாம்பாள் உடலை அங்கிருந்து எடுத்து சென்று நாகை சால்ட் ரோடு அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்