Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சச்சின் பைலட்டுடன் பா.ஜ. கூட்டு: கவிழும் ராஜஸ்தான் காங். அரசு

ஜுலை 12, 2020 11:53

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயத்தில் உள்ளது. ஆட்சியை கவிழ்க்க மாநில துணை முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சச்சின் பைலட்டுடன் பா.ஜ.க. தரப்பு மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 200 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு 2018-ல் தேர்தல் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சி 107 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜ.க. 72, சுயேட்சைகள் 12 பேரும் எம்.எல்.ஏ.க்களாகினர். ராஜஸ்தானைப் பொறுத்தவரையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு முழு பெரும்பான்மையுடன் இருந்து வருகிறது. ஆனால் இந்த அரசை கவிழ்ப்பதில் பா.ஜ.க. தொடர்ந்து முயற்சிக்கிறது என்பது காங்கிரஸ் புகார்.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து பா.ஜ.க. அரியணை ஏறியது. இதே பாணியில் ராஜஸ்தானில் கெலாட் மீது அதிருப்தியில் இருக்கும் சச்சின் பைலட்டுக்கு வலைவீசியிருக்கிறது பா.ஜ.க.

சச்சின் பைலட்டுக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது. இந்த 25 எம்.எல்.ஏ.க்களும் கூண்டோடு ராஜினாமா செய்தால் கெலாட் அரசு கவிழ்ந்துவிடும். இது தொடர்பாக சச்சின் பைலட்டுடன் தொடர்ந்து பா.ஜ.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே 25 எம்,எல்.ஏ.க்களுடன் சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க. ஆட்சி அமைத்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

தலைப்புச்செய்திகள்