Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் தொடரும் உயிரிழப்புகள்

ஆகஸ்டு 19, 2020 07:20

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பொழுதுபோக்கிற்காக ஆன்லைனில் ரம்மி விளையாட தொடங்கியவர்களில் பலர் தற்போது தற்கொலை சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ரம்மி, லியோவெகாஸ், ஸ்பாட்டன் போக்கர், ஜீனியஸ் கசினோ போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கள் காளான்கள் போல முளைத்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஊரடங்கு காலமான இப்பொது, வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து செயல்படுகின்றன. வீட்டிலிருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தில் சிக்கும் இளைஞர்கள் காலப்போக்கில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி விடுகின்றனர்.

இதில் வேலை இல்லாத இளைஞர்கள் மட்டுமல்ல பள்ளி, கல்லூரி மாணவர்களின் உயிரையும் காவு வாங்குகிறது ஆன்லைன் விளையாட்டுக்கள். இதற்கு சமீபத்திய உதாரணம்தான் நித்தீஷ் குமார். சென்னையை சேர்ந்த இவர் ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் மூழ்கி, பணத்தை இழந்ததால் மனமுடைந்தார். கையில் இருந்த பணத்தை முழுவதும் ஆன்லைன் விளையாட்டிலேயே பறிகொத்தார் இந்த கல்லூரி மாணவர். இதனையடுத்து இழந்த பணத்தை மீட்க கடை பணத்திலும் கைவைத்துள்ளார் நித்தீஷ் குமார். இறுதியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலையும் செய்துகொண்டார்.

இதேபோல குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் விழுப்புரத்தை சேர்ந்த காவலர் ஏழுமலையும் பலியானார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், கடன் தொல்லை தாங்க முடியாததால், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்தார் ஏழுமலை. தொடர்ந்து, ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி கடனாளியான திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஆனந் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரம்மியில் தொடர்ந்து பணத்தை இழந்த அவர் சக காவலர்களிடம் வாங்கிய கடன் கழுத்தை நெறிக்க, வேறு வழி  இல்லாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். 

இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்ற வெறியோடு மீண்டும் மீண்டும் விளையாடும் போது கையிருப்பு அனைத்தும் கரைந்து, கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மக்களின் துயரத்தை சாதகமாக பயன்படுத்தி மோசடி செய்வதற்கென்றே பல ஆன்லைன் விளையாட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன என்பது சைபர் நிபுணர்களின் எச்சரிக்கை. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களால் ஆன்லைன் விளையாட்டுகளை சமாளிக்க ஒழுங்குமுறை அமைப்பை கொண்டுவருவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. எனவே ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தின் அறிவுரை. மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்ட விபரீதத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தலைப்புச்செய்திகள்