Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு விதிமுறைகளை பின்பற்றி திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 50 திருமணங்கள் 

ஆகஸ்டு 24, 2020 07:48

கடலூர்: கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இக்கோவில் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இதனால் கோவில் அருகே உள்ள திருமண மண்டபங்களில் அரசு விதிமுறைப்படி திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இருப்பினும் நேற்று திருவந்திபுரம் பகுதியில் திருமண மண்டபங்கள் மற்றும் கோவில் வெளிபிரகாரத்திலும் அரசு விதிமுறைகளை பின்பற்றி 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இந்த திருமணத்தில் மணமக்களுடன் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றிருந்ததை காணமுடிந்தது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் கோவில் முன்பு சென்று சாமி தரிசனம் செய்தனர். திருமணத்தின்போது அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆகஸ்டு மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத சுப முகூர்த்தம் என்பதால் திருவந்திபுரத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே நாங்கள் திருமண தேதியை குறித்து விட்டோம். எனவே அரசின் அறிவுரைப்படி தான் திருமணத்தை நடத்துகிறோம் என்று திருமண வீட்டார்கள் கூறுகின்றனர். 

இதனால் திருமணம் நடைபெறும்போது அரசு அறிவித்த நடைமுறையை பின்பற்றி சுப நிகழ்ச்சிகளை நடத்துகிறார்களா? என்பதை மட்டும் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் கூட்டம் அதிகமானாலும் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலும் அவர்களை எச்சரிக்கை செய்து அறிவுறுத்தி வருகிறோம் என்றார். 

தலைப்புச்செய்திகள்