Sunday, 19th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி கலவரம் திசைமாறும் விசாரணை ஜனாதிபதியிடம் முறையிட்ட கனிமொழி

செப்டம்பர் 18, 2020 06:51

புதுடெல்லி:டெல்லி கலவரம் தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில் அதிருப்தி அடைந்துள்ள எதிர்கட்சி தலைவர்கள் இணைந்து குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முறையிட்டனர். தி.மு.க. எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் உள்ளிட்டோரும் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சுவராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார வல்லுநர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வ நாத் ஆகியோர் மீது டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. போலீஸாரின் துணை குற்றப்பத்திரிகையில் இவர்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம், தேசிய குடியுரிமை சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை கலவரம் நடைபெற்றது இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். 581 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை டெல்லி காவல்துறை கையாளும் விதம் திருப்தி அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஷா ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து இந்த விவகாரத்தில் அவர் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள்  கூறுகையில், டெல்லி காவல்துறையின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்பது தொடர்பான ஒரு மனுவை குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளோம். டெல்லி கலவரத்தின் போது என்ன நடைபெற்றது என்பதை அவரிடம் விளக்கி இந்த விஷயத்தில் அவரை தலையிட வேண்டும் என்று கேட்டோம் என்று கூறினர்.
கனிமொழி அளித்த பேட்டியில், உரிய வகையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று நாங்கள் குடியரசு தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம். சி.ஏ.ஏ.  போராட்டக்காரர்களை டெல்லி கலவரத்தோடு தொடர்புபடுத்தும் முயற்சி நடக்கிறது. அரசியல்வாதிகள், சமூக செயல்பாட்டாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், பொதுமக்கள் இதில் பலிகடாவாக்கப்படுகிறார்கள். இதை தடுக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.  
 

தலைப்புச்செய்திகள்