Sunday, 9th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனிதனின் கடைசி புகலிடம் நீதித்துறை அங்கும் ஊழல்: ஐகோர்ட் நீதிபதி வேதனை 

அக்டோபர் 10, 2020 09:43

மதுரை: ''மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும்போது அரசு ஊழியர்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஊழலுக்கு, நீதித்துறையும் விதிவிலக்கு இல்லை. நீதித்துறையிலும் ஊழல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சரி செய்ய முன் வரவேண்டும்,''  என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்.உலகராஜ். இவர் பத்திரப் பதிவுத்துறை ஊழியர். லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் 2007-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பணி நீக்க உத்தரவு மாற்றி அமைக்கப்பட்டு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உலகராஜ் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது உத்தரவில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையை பலப்படுத்த வேண்டும். கண்காணிப்புத் துறையினர் அரசு அலுவலகங்களில் அடிக்கடி சோதனை நடத்தி ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்தல் வேண்டும். ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்து அரசுத் துறைகளில் ஊழலை அரசு ஒழிக்க வேண்டும். நீதித்துறையில் ஊழல் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கும் ஊழல் நடைபெறுகிறது. அரசுத் துறையில் இருக்கும் ஊழலைவிட மோசமாக உள்ளது. நீதித்துறை என்பது சாதாரண மனிதனின் கடைசி புகலிடமாக உள்ளது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கடமை. நீதித்துறையில் தற்போதுள்ள நடைமுறைகள் ஊழல்களை ஒழிப்பதற்கு போதியதாக இல்லை. ஊழல் தடுப்புத் துறையை நீதித்துறை பலப்படுத்த வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. விசாரணை நடத்தப்பட்ட பின்னரே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்