Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில், பா.ஜ.,வும், மதசார்பற்ற கட்சிகளும்!

மார்ச் 26, 2019 05:28

காஷ்மீர்: எல்லையில் அத்துமீறல்கள், பயங்கரவாத அமைப்புகள் மீதான நடவடிக்கைகள், பிரிவினைவாத அமைப்புகளுக்கு தடை என, பரபரப்பான, பதற்றமான சூழ்நிலையிலும், ஜம்மு - காஷ்மீரில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பா.ஜ.,வுக்கு எதிராக, மத சார்பற்ற கட்சிகள், அமைப்புகள் இணைந்து வருகின்றன. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் என, மூன்று பிராந்தியங்களை கொண்டது. காஷ்மீரில், மூன்று தொகுதிகள், ஜம்முவில், இரண்டு; லடாக்கில் ஒரு தொகுதி. இந்தத் தொகுதிகளுக்கு, ஏப்., 11, 18, 23 29, மே 6 என, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதில், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும், மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. ஜம்மு மற்றும் லடாக் பிராந்தியத்தில், பா.ஜ., மிகவும் வலிமையாக உள்ளது. கடந்த, 2014 தேர்தலில், இந்த பிராந்தியத்தில் உள்ள, ஜம்மு, உதம்பூர் மற்றும் லடாக் தொகுதிகளில், பா.ஜ., வென்றது. 

அதே நேரத்தில், காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள, பாரமுல்லா, ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் தொகுதிகளில், மக்கள் ஜனநாயகக் கட்சி வென்றது.சமீபத்தில் இங்கு, மூன்று அரசியல் நிகழ்வுகள் நடந்தன. சமீப காலம் வரை, பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின், மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜம்முவில் உள்ள தொகுதி களில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளது. 'இந்தத் தொகுதிகளில், கட்சிக்கு, இரண்டு லட்சம் ஓட்டு உள்ளது. அதை பிளவுபடுத்த விரும்பவில்லை. மத சார்பற்ற அமைப்புக்கு இந்த ஓட்டு போய் சேர வேண்டும்' என, மெஹபூபா கூறியுள்ளார். இது, அந்தத் தொகுதிகளில் போட்டியிட உள்ள, காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமாக அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள, இரண்டு தொகுதிகளிலும், காங்கிரசுக்கு, தேசிய மாநாட்டுக் கட்சி, ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால், இந்தத் தொகுதிகளில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்படும். மற்ற மத சார்பற்ற அமைப்புகள், காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு மற்றும் லடாக்கில், பா.ஜ.,வின் வலிமையை குறைத்து, அதன் வெற்றியை குறைக்கும் முயற்சியில், இந்தக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, காஷ்மீர் பகுதிக்குள், பா.ஜ.,வை நுழைய விடக் கூடாது என்பதற்கான முயற்சிகளிலும், இந்தக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த, 2008ல், ஐ.ஏ.எஸ்., தேர்வில், நாட்டிலேயே முதலிடம் பெற்ற, ஷா பசல், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியை துவக்கினார். அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார். இதனால், காஷ்மீர் பகுதியில், கட்சிகளின் ஓட்டு கள் பிரிவதற்கு, வாய்ப்பு உள்ளது. 

காஷ்மீர் பகுதியில், தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சஜ்ஜத் லோனின், மக்கள் மாநாட்டுக் கட்சிக்கு இடையே, போட்டி உள்ளது. அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடப் போவதாக, மெஹபூபா அறிவித்துள்ளார். ஸ்ரீநகர் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி நிறுவனர், பரூக் அப்துல்லா, மீண்டும் போட்டியிட உள்ளார். அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என, காங்கிரஸ் கூறியுள்ளது. பாராமுல்லா தொகுதியில், சஜ்ஜத் லோனின் கட்சி, மிகவும் வலுவாக உள்ளது. பா.ஜ.,வுடன் முன்பு கூட்டணி அமைந்திருந்த அக்கட்சியின் சார்பில், முன்னாள் போலீஸ் அதிகாரி, ராஜா அய்ஜாஸ் நிறுத்தப்படுகிறார். இங்கு, தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்திஉள்ளன.

தலைப்புச்செய்திகள்