Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் பெண்கள் கணக்கில் போடப்படும்: ப.சிதம்பரம்

மார்ச் 27, 2019 09:02

சென்னை: முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு முக்கியமான, புரட்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள குறைந்தபட்ச வருமான திட்டம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கிய பங்கை வகிக்கும். 

இதற்கு காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் 2-ந்தேதி தேர்தல் அறிக்கை வெளியாகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் காங்கிரஸ் கனவை நனவாக்குவதாகும். இது கடைக்கோடி மக்களின் வறுமையை ஒழிப்பதாகவும், துயரை துடைப்பதாகவும் இருக்கும். 

இந்தியாவில் இன்னும் ஏழ்மை இருக்கிறது. பெரும்பாலான மக்கள் அதில் இருந்து விடுபடவில்லை. ஏழ்மையான குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டில் 5 கோடி குடும்பங்கள் ஏழ்மையில் இருக்கின்றன. ஒரு குடும்பத்துக்கு 5 பேர் என்றால் 25 கோடி பேர் இந்த திட்டம் மூலம் பயனடைவார்கள். 

இந்த திட்டத்தை செயல்படுத்த எல்லா குறியீடுகளையும் கணக்கிட்டு வருகிறோம். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் வழங்க முடிவு எடுத்து இருக்கிறோம். இந்த திட்டம் படிப்படியாக 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் 5 கோடி குடும்பங்களும் கொண்டு வரப்படும். 

ஆட்சி பொறுப்பேற்ற உடனே இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது. கடந்த 20 ஆண்டுகாலம், 40 ஆண்டு காலத்துக்கு முன்னாள் இந்த திட்டத்தை செயல்படுத்த சாத்தியமில்லாமல் இருந்தது. 

1996-க்கு முன்பு ஏழ்மை நிலை அதிகமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டி உள்ளது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.200 லட்சம் கோடி ஆக உள்ளது. இதன் ஆண்டு வளர்ச்சி 12 சதவீதமாக உள்ளது. 

வரும் 5 ஆண்டுகளில் மொத்த உற்பத்தி ரூ.400 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் மாநில வருமானங்களும் உயர்ந்து 5 ஆண்டுகளில் வருமானம் இரட்டிப்பு ஆகி விடும். இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. செயல்படுத்துவோம். 

பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்துறை அறிஞர்கள் கருத்தை கேட்டு தான் இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். மேலும் திட்டத்தை நிறைவேற்றும் போதும் அவர்கள் கருத்து அவ்வப்போது கேட்கப்படும். திட்டத்தை நிறைவேற்ற தனி நிபுணர் குழு அமைக்கப்படும். 

ஏற்கனவே 100 நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தபோது இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும் என்று கேட்டு கேலியும் கிண்டலும் செய்தார்கள். அந்த திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தினோம். 

அதே போல இப்போது கூறியுள்ள குறைந்த வருவாய் உத்தரவாத திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்துவோம். 

திட்டத்தை செயல்படுத்த சாத்தியம் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் சொல்லவில்லை. திட்டத்தை கவனமாக செயல்படுத்த வேண்டும் என்றுதான் கூறி இருக்கிறார். 

இந்தியாவில் கடந்த காலங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் 90 சதவீதம் பேர் இருந்தனர். 10 ஆண்டுக்கு முன்பு அது 70 சதவீதமாக இருந்தது. இப்போது அது 20 சதவீதமாக குறைந்து உள்ளது. 

வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்குதான் இந்த புரட்சிகர திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். மத்திய மந்திரி அருண்ஜெட்லி இந்த திட்டம் சாத்தியம் இல்லை என்று கூறுவது தவறானது. 2014-ம் ஆண்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று பா.ஜனதாவினர் கூறினார்கள். அப்போது அது சாத்தியம் இல்லாதது என்று அருண்ஜெட்லி ஏன் சொல்லவில்லை. 

எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்று ஒரு திட்டத்தை வைத்து மதிப்பிட முடியாது. ஏழ்மை ஒழிய வேண்டும் என்றால் குறைந்தபட்ச வருமானம் அந்த குடும்பத்துக்கு வேண்டும். அது கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மானியத்தை வழங்குவதாக சொல்கிறோம். 

குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் பணம் பெண்களிடமே வழங்கப்படும். பெண்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அவர்களது கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 

21-ம் நூற்றாண்டில் வறுமை ஒழிப்பை ஒரு அறமாக ஏற்று இருக்கிறோம். இந்த தார்மீக கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. 

இந்த திட்டத்தை செயல்படுத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் தேவைப்படும். திட்டத்தை சவாலாக ஏற்று செயல்படுத்துவோம். ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு போன்றவற்றால் சிறு, குறு தொழில்கள் சிதைந்து விட்டன. 
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். பேட்டியின்போது மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத், பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, குமரிஅனந்தன், செல்வபெருந்தகை, கராத்தே தியாகராஜன், எம்.பி. ரஞ்சன்குமார், ஸ்ரீராம், தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

 


 

தலைப்புச்செய்திகள்