Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எம்.ஜி.ஆர். போட்டியிட்ட ஆலந்தூர் தொகுதியில் களமிறங்கும் கமல்

பிப்ரவரி 23, 2021 02:05

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். இதற்காக மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர், வேளச்சேரி ஆகிய 4 தொகுதிகளில் தீவிரமாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் களம் இறங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளை பெற்றது. இந்த தொகுதிக்குள் வரும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 22 ஆயிரம் ஓட்டுகள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து கமல்ஹாசன் அங்கு களமிறங்க கூடுதல் வாய்ப்புள்ளதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆலந்தூர் தொகுதியை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். 1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் எம்.ஜி.ஆர். களமிறங்கி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவும் கமல்ஹாசன் அங்கு போட்டியிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.இதுதொடர்பாக ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட  பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஒருவர் பரபரப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் வேட்பாளரான கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவது பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக தொலைபேசி எண்களையும் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து ஆலந்தூர் தொகுதியிலேயே கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு வலுவாக உள்ளதாக அந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பூத் கமிட்டியும் அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சியினர் கூறியுள்ளனர். இதனால் கமல்ஹாசன் அங்கு போட்டியிடும் பட்சத்தில் மக்களை சந்திப்பது மிகவும் எளிதாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்