Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் கூட்டணிக்கு தயார்: ஆம் ஆத்மி அறிவிப்பு

ஏப்ரல் 14, 2019 07:24

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், டில்லி மற்றும் ஹரியானா மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான சண்டிகரிலும், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக, ஆம் ஆத்மி மூத்த தலைவர், மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். 

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில் உள்ள ஏழு தொகுதிகள் மற்றும் ஹரியானாவில் உள்ள, 10 லோக்சபா தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 12ல் தேர்தல் நடக்கவுள்ளது. 

இந்நிலையில், டில்லி, ஹரியானா மற்றும் சண்டிகரில், கணிசமான தொகுதிகளில், காங்., கட்சியுடன் கூட்டணி அமைக்க, ஆம் ஆத்மி கட்சி விருப்பம் தெரிவித்தது. ஆனால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, இறுதி முடிவு எடுப்பதை, காங்., தாமதப்படுத்தி வருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த கூட்டணி பேச்சுகள், தொடர்ந்து தோல்வியில் முடிந்தன. 

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி மாநில துணை முதல்வருமான, மணீஷ் சிசோடியா கூறியதாவது ,லோக்சபா தேர்தலில், மோடி, அமித் ஷா தலைமையிலான, பா.ஜ.,வை, தோற்கடிக்க வேண்டும் என்பதே, எங்கள் பிரதான நோக்கம். டில்லியில் மட்டும் அது சாத்தியமாகாது. 

பெரும்பான்மை இடங்களுடன், பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்றால், டில்லி, ஹரியானா மற்றும் சண்டிகரில் கூட்டணி அமைக்க வேண்டும். ஏற்கனவே ஹரியானா மாநிலத்தில், சிறிய கட்சியான, ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.  

ஹரியானா மாநில முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா பேரன், துஷ்யந்த், சமீபத்தில் தான், இந்த கட்சியை துவக்கினார்.எனவே, டில்லி, ஹரியானா மற்றும் சண்டிகரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், அதிக இடங்களை கைப்பற்றலாம். ஆனால், டில்லியில் கூட்டணி அமைப்பதில், காங்., மேலிடம், இன்னும் முடிவு செய்யாமல் தாமதப் படுத்துகிறது. இப்போதும், காங்., கட்சியுடன் கூட்டணி அமைக்க, நாங்கள் தயாராக உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்