Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள்: தம் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

ஏப்ரல் 30, 2021 06:07

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தங்கள் நாட்டுக் குடிமக்கள் வெளியேற வேண்டுமென்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், அங்கு பணிபுரியும் அமெரிக்க அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறோம். அமெரிக்க குடிமக்கள் நாடு திரும்புவதற்கான பயணங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 40%க்கும் மேலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியைத் தீவிரமாகச் செலுத்தியதன் விளைவாக அங்கு கரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் இரண்டு வாரங்களாக கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தம் நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. வங்கதேசமும் இந்தியாவுடனான எல்லையை மூடியுள்ளது. உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்