Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

ஏப்ரல் 23, 2019 06:52

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் விரும்பியது. இதுதொடர்பாக இரு கட்சிகளும் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. 

ஆனால் தொடர்ந்து நடந்த இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததால், இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனது. இதனால் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்தது. 

இதைத்தொடர்ந்து டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைமை நேற்று வெளியிட்டது. அங்கு மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 6 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 

இதில் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ஷீலா தீட்சித்துக்கு வடகிழக்கு டெல்லி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர் பா.ஜனதா மாநில தலைவர் மனோஜ் திவாரியை அந்த தொகுதியில் எதிர்கொள்கிறார். 

முன்னாள் மாநில தலைவர் அஜய் மக்கானுக்கு புதுடெல்லி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மற்றொரு முன்னாள் தலைவரான அகர்வால், சாந்தினி சவுக் தொகுதியில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தனை எதிர்த்து போட்டியிடுகிறார். 

இதைப்போல மூத்த காங்கிரஸ் தலைவர் மகபால் மிஸ்ரா மேற்கு டெல்லி தொகுதியிலும், மாநில முன்னாள் கட்சித்தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கிழக்கு டெல்லி தொகுதியிலும் களம் காண்கின்றனர். வடமேற்கு டெல்லி தொகுதி, கட்சியின் செயல் தலைவர் ராஜேஷ் லிலோதியாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. 

தெற்கு டெல்லி தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. அங்கு ரமேஷ் குமார் சவுகான் அல்லது சுஷில் குமார் ஆகியோரில் ஒருவரை களமிறக்க கட்சி திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்