Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காந்த சக்தி தருமா கரோனா தடுப்பூசி?- கலகலக்க வைக்கும் காமெடிப் புகார்கள்

ஜுன் 15, 2021 12:52

“வாய்ப்பு கிடைக்கும்போதெல் லாம் சிரியுங்கள். சிரிப்பு என்பது ஒரு மலிவான மருந்து” என்றார் ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் கோர்டன் பைரன். ஆனால், கரோனா அபாயத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும் விலை மதிப்பற்ற மருந்தான தடுப்பூசியை வைத்தே காமெடி செய்திருக்கிறார் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த முதியவர் அர்விந்த் சோனார்.

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட பின்னர் தனது உடலில் காந்த சக்தி உருவாகிவிட்டதாகக் கூறும் அர்விந்த் சோனார், ஸ்பூன்கள், நாணயங்கள் ஒட்டப்பட்ட உடலுடன் போஸ் கொடுத்திருக்கிறார். இந்தத் தகவலை பரவலாக்கியவர் அவரது மகன்ஜெயந்த் சோனார்தான். தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பாக இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான வதந்திகளை செய்திகளாக நினைத்து படித்துக் குழம்பிக் கிடந்த ஜெயந்த், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் காந்த சக்தி கிடைக்கும் எனும் செய்தியால் க(ல)வரப்பட்டிருந்தார்.

ஜூன் 2-ம் தேதி இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு வீடு திரும்பிய தாய், தந்தை இருவரிடமும் அதுதொடர்பாக ஒரு பரிசோதனை நடத்தியிருக்கிறார் ஜெயந்த். இருவர் உடலிலும் நாணயங்கள், கரண்டிகள் என வைத்து சோதித்துப் பார்த்ததில் தந்தையிடம் மட்டும் அப்படியான அதிசயம் நிகழ்ந்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்திருக்கிறார். முதலில் வியர்வையின் காரணமாகத்தான் இப்படி ஒட்டுகிறது என்று நினைத்த குடும்பத்தினர், பின்னர் இயல்பாகவே அப்படி ஒரு ஒட்டுதல் நிகழ்வதைப் பார்த்து அதிசயித்தனர்.

பின்னர் அதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட, அந்தத் தகவல், செய்திஊடகங்களிலும் எதிரொலித்துவிட்டது. கூடவே, “தடுப்பூசியால்தான் அப்பாவின் உடம்பில் காந்த சக்தி வந்ததா அல்லது முன்பிருந்தே அப்படியொரு ஆற்றல் அவரது உடலில் இருந்ததா எனத் தெரியவில்லை” என்றும் ஒரு குழப்ப அறிக்கையையும் அவரது குடும்பத்தினர் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அர்விந்தின் உடலில் கரண்டி,நாணயங்கள் போன்ற பொருட்கள்காந்தம் போல் ஒட்டிக்கொள்வதாகவே தெரிந்தாலும், தடுப்பூசியின் விளைவாகத்தான் அதுநடக்கிறது என்பதற்கு எந்தஆதாரமும் இல்லை என்று அவரை பரிசோதித்த மருத்துவர்களும் வல்லுநர்களும் தெளிவுபடுத்திவிட்டனர். நாசிக் முனிசிபல்கார்ப்பரேஷன் மருத்துவ அலுவலர்கள் முதல் பல வல்லுநர்கள், ‘என்னடா இது மருத்துவத்துக்கு வந்த சோதனை’ என்று தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான்.

இப்படியான செய்திகள் புதிதல்ல. தடுப்பூசி போட்ட இடமான தனது இடது புஜத்தில் பல்பு வைத்தால் எரிவதாக (பல்புதான்) ஒருவர் கடந்த மாதம் பரபரப்பைக் கிளப்பினார். தடுப்பூசி மருந்தில் ‘சிப்’ வைக்கப்பட்டிருக்கிறது (கரன்ஸி நோட்டில் சிப் இருக்கிறது என்று யாரோ ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறதா?) என்றும் அதுதான் எதையோ செய்து பல்பை எரிய வைக்கிறது என்றும் அந்த மனிதர் உளறிக்கொட்டினார்.

அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்லி விளக்க மருத்துவ வல்லுநர்கள் படாத பாடு பட வேண்டியிருந்தது. பின்னர் அது நண்பர்களுக்காக ஜாலியாக உருவாக்கிய வீடியோ என்று ஜகா வாங்கினார் அந்த நபர்.

இவ்வளவு ஏன்? அமெரிக் காவில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஒஹாயோ மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் கரோனா தடுப்பூசியால் தனது உடலில் காந்த சக்தி வந்துவிட்டதாகச் சொன்னார். பத்திரிகையாளர்களைக் கூட்டி அதை நிரூபித்துக் காட்டவும் தலைப்பட்டார்.

ஆனால் பாருங்கள், அவர் ஒரு சாவியைத் தன் கழுத்தில் பல முறை வைத்தும், அது ஒட்டிக்கொள்ளாமல் கீழே விழுந்துகொண்டே இருந்தது, இந்த சம்பவம் அறிவுள்ள அமெரிக்கர்களை தலையில் அடித்துக்கொண்டு சிரிக்க வைத்திருக்கிறது.

தலைப்புச்செய்திகள்