Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யூ டியூப்பர் மதனை தேடும் பணி தீவிரம்: புதிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு

ஜுன் 17, 2021 12:02

சென்னை:தலைமறைவாக உள்ள யூ டியூப் மதனை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். யூ டியூப் சேனலை நடத்தி வரும் மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தன்னுடன் உரையாடும் பெண்களிடம் ஆபாசமாகவும் பேசியுள்ளார்.

இது தொடர்பாக புளியந்தோப்பு காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கினர். பின்னர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். சென்னையில் வசிக்கும் மதன்சேலத்தை சேர்ந்தவர். அவரைதேடிக் கண்டுபிடிக்க சென்னைபோலீஸார் சேலம் விரைந்துள்ளனர். மேலும், அண்டைமாநிலங்களுக்கும் சென்றுள்ளனர். சென்னையிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மதனின் தந்தை, மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மதன் எங்கு இருக்கிறார் என்பதை போலீஸாரால் இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுஒருபுறம் இருக்க மதன் தலைமறைவாக இருந்து கொண்டு தனது ரசிகைகளுடன் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், நான் ஜெயிலுக்கு செல்லவாய்ப்பு இல்லை. ஒருவேளை அப்படி நடந்தால் வெளியில் வந்து மீண்டும் ‘யூ டியூப்’ சேனலை தொடங்குவேன். அதற்கு மதன் ‘யூ டியூப் சேனல்என்றே பெயர் வைப்பேன்.

அப்போது தற்போது இருப்பதை விட வேகமாக செயல்படுவேன். நித்யானந்தாவே வெளியில் இருக்கும் போது என்னை கைது செய்துவிடுவார்களா என்ன, இதற்கெல்லாம் பயந்து நான் முடங்கமாட்டேன் என ஆடியோ நீள்வதாக போலீஸார் தெரிவித்தனர். மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்த ஆடியோ உரையாடல்களை வைத்து மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயன்று வரு கின்றனர்.

தலைமறைவாக இருக்கும் மதனை நெருங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மதன் வீட்டில் இருந்து அவரின் தந்தை, அண்ணன், மற்றும் மதனின் மனைவி என கூறப்படும் கிருத்திகாவை 8 மாத கைக்குழந்தையுடன் அழைத்து வந்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். மதனுக்கு உடந்தையாக இருந்ததாக கிருத்திகாவை மத்திய குற்றபிரிவு போலீஸார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்