Sunday, 19th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும்: பிரதமர் மோடி

ஜுன் 29, 2021 11:31

புதுடெல்லி: கரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நடவடிக்கைகள் பொருளாதார செயல்பாடுகளுக்கு புத்தாக்கம் அளித்து, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சுகாதாரம், குழந்தைகளுக்கான சுகாதார வசதிகள், விவசாயிகள், சிறு தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் புரிவோருக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது:

“நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறிப்பாக சேவைகள் அதிகம் சென்றடையாத பகுதிகளில் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்தி, மருத்துவ உள்கட்டமைப்பில் தனியார் முதலீட்டை ஊக்குவித்து, முக்கிய மனிதவளங்களை அதிகரிக்கும். குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நமது விவசாயிகளுக்கு உதவ முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது செலவுகளை குறைத்து, வருமானத்தை அதிகரித்து, அதிகளவிலான உறுதிக்கும், வேளாண் செயல்பாடுகளின் நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்க பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறு தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் புரிவோர் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை தக்கவைப்பதோடு மட்டுமில்லாமல் அவற்றை மேலும் விரிவாக்குவதற்கு தேவையான கூடுதல் ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுடன் இணைந்துள்ளோருக்கு உதவ நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் பொருளாதார செயல்பாடுகளுக்கு புத்தாக்கம் அளித்து, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும். விளைபயனுடன் இணைந்த மின்சார விநியோக திட்டம், பொது-தனியார்-கூட்டு திட்டங்கள் மற்றும் சொத்தை பணமாக்குதலுக்கான ஒழுங்குப்படுத்தப்பட்ட செயல்முறைகள், சீர்திருத்தங்களுக்கான நமது அரசின் தொடர் உறுதியை பிரதிபலிக்கின்றன” என்றார்.

தலைப்புச்செய்திகள்