Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

7-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பொம்மை அகரத்தில் கண்டெடுப்பு

ஜுலை 16, 2021 04:58

சிவகங்கை:  சிவகங்கைமாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் சுடு மண் பெண் பொம்மை, உடைந்த நிலையில் உறை கிணறு, கீழடியில் மேலும் ஒரு உறை கிணறு கண்டறியப்பட்டன.திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை 800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கீழடியில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இங்கு மண் பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவு தொழிலில் பயன்படும் தக்களி, கற்கோடாரி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், மண் குவளைகள், சங்கு வளையல்கள், சுடுமண் மற்றும் கண்ணாடி பாசிகள், சூதுபவளம் படிகம், எடைக்கற்கள், அரிவாள், ஆணி, சிறிய செப்பு மோதிரம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன..

கொந்தகையில் 7-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. கீழடி அகழாய்வில் ஒரு குழியில் உறைகிணறு ஏற்கெனவே கண்டறியப்பட்டது. இந்நிலையில், தற்போது மற்றொரு குழியில் மேலும் ஒரு உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது. இது விளிம்பில் அலங்கரிப்புடன் 58 செ.மீ. விட்டம், 3 செ.மீ. தடிமன் கொண்டது. இரண்டு உறைகிணறுகளின் உயரம் நீண்டு கொண்டே செல்வதால் தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து தோண்டி வருகின்றனர்.

அதேபோல் அகரம் அகழாய்வில் சுடுமண் பெண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது. மேலும் உடைந்த நிலையில் ஒரு உறைகிணறும் கண்டறியப் பட்டது.

தலைப்புச்செய்திகள்