Tuesday, 11th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடிகர் விஜய்யுடன், ரங்கசாமி திடீர் சந்திப்பு- அரசியல் குறித்து ஆலோசனையா?

பிப்ரவரி 05, 2022 10:18

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதையடுத்து முதல்-அமைச்சராக ரங்கசாமி பொறுப்பேற்றார். இதையொட்டி ரங்கசாமியை சந்திக்க நடிகர் விஜய் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நடிகர் விஜய் புதுவைக்கு வந்தால் அவரது ரசிகர்கள் அதிகம் வருவார்கள். இதனால் கொரோனா சூழலில் இந்த சந்திப்பை ரங்கசாமி விரும்பவில்லை என்று தெரிகிறது.

இதனால் சென்னைக்கு வரும் சந்தர்ப்பத்தில் அங்கு வைத்து நடிகர் விஜய்யை சந்திப்பதாக ரங்கசாமி தெரிவித்து இருந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று அங்கு சென்றார். திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு ரங்கசாமி திடீரென சென்றார். அங்கு விஜய்யை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, படப்பிடிப்புக்கு புதுச்சேரி சிறந்த இடம், பிரெஞ்சு கட்டிட கலைகள், நேரான, அழகான சாலைகள் உள்ளன. அங்குள்ள மக்களும் நல்ல ஆதரவு தருகின்றனர். எனவே ஏராளமான திரைப்படங்கள் புதுவையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் தற்போது அரசால் படப்பிடிப்பு கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு திரைப்படங்கள் எடுக்க சிரமமாக உள்ளது. எனவே கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும். புதுவையில் திரைப்பட கல்லூரி ஒன்றை அரசு சார்பில் தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நடிகர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அரசியலில் குதிக்க நடிகர் விஜய் ஆயத்தமாகி வரும் நிலையில் அதுகுறித்து ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்றும் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது. இந்த சந்திப்புக்குப் பின் அங்கிருந்து புறப்பட்டு நேற்று இரவு ரங்கசாமி புதுச்சேரி வந்தார்.

நடிகர் விஜய்யுடனான சந்திப்பு குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்ட போது, சென்னை சென்ற இடத்தில் மரியாதை நிமித்தமாக நடிகர் விஜய்யை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்