Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பு பணி- தமிழக மீனவர்கள் அச்சம்

பிப்ரவரி 16, 2022 12:38

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கும்போது எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியா-இலங்கை எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது தான் இந்த சம்பவம் நடைபெற்று வருகிறது.

சில நேரங்களில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலும் நடத்தி வருகிறது. தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீனவர்களை சிறையில் அடைக்கின்றனர்.

பின்னர் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கையின் பேரில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டத்தை சந்திப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களது விசைப்படகுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசு ஏலம் விட்டது. இந்த நடவடிக்கைக்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பாக இலங்கை அரசு தரப்பில் தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாகவும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாகவும் இலங்கையில் உள்ள மீனவர்கள் புகார் தெரிவித்ததன் பேரிலேயே கடற்படை தீவிர ரோந்து சென்று விதிகளை மீறும் தமிழக மீனவர்களை கைது செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது எல்லை தெரியாமல் தான் தாங்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடிப்பதாக தெரிவித்தனர். இதனை தவிர்க்க கடல் எல்லையை மீனவர்கள் கண்டுபிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களை மீட்க மத்திய -மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் மீனவர் சங்கங்கள் முடிவு செய்தன. இந்த நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் சென்றபோது அங்கு இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட குட்டி ரோந்து கப்பல்களில் அணிவகுத்து நின்றனர். இதனை பார்த்து தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் அங்கு செல்லாமல் வேறு பகுதிகளில் கிடைத்த மீன்களை பிடித்துக்கொண்டு கரை திரும்பினர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்றபோது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் அணிவகுத்து நின்றனர். இது எங்கள் எல்லை பகுதி. இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது. இதனை மீறினால் சிறை பிடிக்கப்படுவீர்கள் என எச்சரித்தனர். இதனால் பயந்து போன நாங்கள் அங்கிருந்து திரும்பி விட்டோம். பாரம்பரிய இடங்களில் மீன் பிடிக்க முடியாமல் நாங்கள் கரை திரும்பி உள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு கூறும் கடல் எல்லை சரிதானா என்பது எங்களுக்கு தெரியவில்லை. இந்த வி‌ஷயத்தில் தமிழக மீனவர்களை பாதுகாக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் நமது கப்பல்களை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

தலைப்புச்செய்திகள்