Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் வாக்குறுதிகள்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் திமுக மனு

ஏப்ரல் 12, 2022 01:00

புதுச்சேரி: தி.மு.க. சார்பில் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் கோரிக்கை மனு அளிக்கவுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.

புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை சேர்ந்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் புதுவைக்கு வந்து பிரச்சாரம் செய்தபோது மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையான மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, ஓட்டுக்களை பெற்று கூட்டணி ஆட்சியிலும் அமர்ந்தனர். 

ஆனால் புதுவையில் ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு நிறைவடையும் நிலையிலும் கூட இதுவரை எந்த வாக்குறுதி களையும் பா.ஜனதா நிறைவேற்ற வில்லை. மத்திய மந்திரிகள், பா.ஜனதா தேசிய தலைவர்கள் வாரந்தோறும் புதுவைக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். 

இதைக்காணும் மக்கள் ஏதேனும் ஒரு நன்மை நமக்கு கிடைக்கும் என்று நப்பாசை கொள்கின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. 

வருகிற 24-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரவுள்ளதாக கவர்னர் தமிழிசை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மீண்டும் மக்களிடம்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்தான் புதுவை உள்ளது. 

இவர் அறிவிப்புகள் உடனடியாக அமலுக்கு வர வாய்ப்புகளும் உள்ளது.  எனவே சட்டசபை தேர்தலின்போதும், அதன்பிறகும் பா.ஜனதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றக்கோரி, தி.மு.க. புதுவை சட்டமன்ற குழு சார்பில் மத்திய மந்திரி அமித்ஷாவிடம் மனு அளிக்க உள்ளோம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்