Monday, 29th April 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி படத்தை அகற்றியதால் சர்ச்சைக்குள்ளான பேரூராட்சி அலுவலகத்தில் உதயநிதி படம்

ஏப்ரல் 16, 2022 11:11

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்துார் பேரூராட்சி அலுவலகத்தில், பா.ஜ.,வினரால் வைக்கப்பட்ட பிரதமர் மோடி படத்தை, கழற்றி வீசி எறிய உத்தரவிட்ட பேரூராட்சி தலைவரின் கணவரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சதீஷ்குமார் கூறியதாவது: பா.ஜ.,வின் 42வது நிறுவன நாள் ஏப்., 6ல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், ஒரு நிகழ்வாக வேப்பத்துாருக்குச் சென்றேன். வேப்பத்துார் பேரூராட்சி 7வது வார்டு பா.ஜ., உறுப்பினர் சந்திரசேகரனின் ஏற்பாட்டின்படி, அங்குள்ள பேரூராட்சி அலுவலகத்தில், பிரதமர் மோடியின் படம் மாட்டப்பட்டது.

அங்கு ஏற்கனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, மயிலாடுதுறை எம்.பி., செ.ராமலிங்கம், அரசு கொறடா கோவி செழியன், தி.மு.க., தஞ்சை வடக்கு மாவட்ட செயலர் பம்பப்படையூர் கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோரின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டுள்ளன. ஆனால், அதே பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக இருக்கும், பேரூராட்சி தலைவர் அஞ்சம்மாளின் கணவர் மதியழகன், செயல்அலுவலர் லதா தடுத்தும், பிரதமர் மோடி படத்தை அப்புறப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக, திருவிடைமருதுார் போலீசில் புகார் கொடுத்தேன். மாவட்ட கலெக்டரிடமும் புகார் கொடுக்க உள்ளேன். பிரதமர் படத்தை, பேரூராட்சி அலுவலகத்தில் மீண்டும் வைக்காமல் விட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

பேரூராட்சியின் 7வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சந்திரசேகரன் கூறுகையில், ''பேரூராட்சி தலைவர் அஞ்சம்மாளின் கணவர் ஆட்டம் அதிகமாக உள்ளது.''செயல் அலுவலர் லதா உள்ளிட்ட பணியாளர்கள் அவ்வளவு பேரையும் வேலை வாங்குவதே அவர்தான். அவர் வைத்தது தான் பேரூராட்சி அலுவலகத்தின் சட்டம் என்றாகிவிட்டது,'' என்றார்.

பேரூராட்சித் தலைவர் அஞ்சம்மாளிடம் கேட்டபோது, ''என் கணவர் மதியழகனிடம் பேசுங்கள்,'' என்றார்.மதியழகன் கூறியதாவது: அலுவலகத்தில் ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் படம் மாட்டப்பட்டிருந்தது. அதை கழற்றி விட்டு மோடி படத்தை மாட்டினர். எனவே, மோடி படத்தை கழற்றி விட்டு, முதல்வர் படத்தை மீண்டும் மாட்டினோம்.

பிரதமர் மோடி படம் வேறு இடத்தில் மாட்டப்பட்டு விட்டது. மோடி படத்தை கழற்றும்போது, கவுன்சிலர் சந்திரசேகரன், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பிரச்னையை பெரிதாக்கிவிட்டார். அரசியலுக்காக பிரச்னை செய்கின்றனர். அதை சந்திக்கும் வல்லமையை தி.மு.க., எங்களுக்கு கொடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

செயல் அலுவலர் லதா கூறுகையில்,''முதல்வர் ஸ்டாலின் படம் இருந்த இடத்தில், பிரதமர் மோடி படம் வைக்கும்படி, பா.ஜ., தரப்பில் அழுத்தம் தரப்பட்டது. தற்போது பிரதமர் மோடி படம், பேரூராட்சி அலுவலகத்தில் வேறொரு இடத்தில் மாட்டப்பட்டு விட்டது. பிரச்னை சுமுகமாக முடிந்தது,'' என்றார்.

தலைப்புச்செய்திகள்