Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

ஏப்ரல் 28, 2022 12:07

குண்டடம்: குண்டடம் பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகின்றனர்.

குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம், சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடபாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துவருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:

குண்டடம்  பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம்.

மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்ன வெங்காயம் பயிர் செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர் செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒடிசா நாற்று ரகங்களை பயிர் செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குண்டடம் பகுதியில் தொடர் கனமழை பெய்து வந்தது. மேலும் அறுவடை செய்யும் சமயத்தில் உள்ள சின்ன வெங்காயம் தண்ணீர் நின்று அழுகிப்போனது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். ஆகவே தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் அரசு முன்வந்து உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதிக்காத வகையில் உரிய விலையை நிர்ணயித்து சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வழங்கினால் நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்