Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவமழை

மே 30, 2022 11:50

சென்னை : நாடு முழுதும் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைக்காக எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை, நேற்று கேரளாவில் துவங்கியது. இயல்பை விட மூன்று நாட்கள் முன்னதாகவே மழை துவங்கி உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நம் நாட்டில், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கான நீராதாரங்களை நிரப்பும் முக்கிய மழை பருவமாக, தென்மேற்கு பருவமழை கருதப்படுகிறது.

அந்தமானில் துவங்கும் இந்த பருவமழை, கேரளாவில் நுழைந்து, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் கோவா வழியாக நாட்டின், அனைத்து பகுதிகளுக்கும் விரிவடையும்.இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை, நான்கு வாரங்களுக்கு முன் அந்தமானில் துவங்கியது. இதன் காரணமாக, கேரளா மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளில், பருவமழை பெய்து வந்தது. மேலும், வடகிழக்கு மாநிலங்களிலும், பருவமழையின் தாக்கம் காணப்பட்டது.இதைத் தொடர்ந்து, கேரளா மற்றும் அதையொட்டிய தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவின் தென்மேற்கு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை நேற்று துவங்கியதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயல்பான ஜூன் 1க்கு பதில், மூன்று நாட்கள் முன்னதாகவே, பருவமழை துவங்கி விட்டதாகவும், இது படிப்படியாக பல்வேறு மாநிலங்களுக்கு விரிவடையும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.இதன் காரணமாக, தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களின் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள, மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் மட்டுமே, தென் மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.சென்னையில் ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் உச்சம் -கேரளாவிலும், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில், வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில், கோடை வெயில் ஒரு வாரமாக உக்கிரம் காட்டி வருகிறது. தலைநகரான சென்னையில், பகல் நேர வெப்பம் அனலாக கொதிக்கிறது.அக்னி நட்சத்திர வெயில் காலம் நேற்று முன்தினம் முடிந்தாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் கொஞ்சமும் குறையவில்லை.

இதனால், வேலைக்கு செல்வோரும், வியாபாரிகளும், களப்பணிகளில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களும், பகல் நேரங்களில் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். வாகன ஓட்டிகள், நண்பகல் நேரங்களில், மரங்களின் நிழலை தேடியும், பூங்காக்களிலும் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. பழரசம், மோர், இளநீர் மற்றும் பழ வகைகளின் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது. மாநிலத்திலேயே அதிகபட்ச வெப்பநிலை, ஒரு வாரமாக சென்னையில் தான் பதிவாகிறது. நேற்று மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இன்றும், இதே அளவுக்கு வெப்பநிலை பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நேற்று மாலை நிலவரப்படி, மீனம்பாக்கம், கடலுார், கரூர் பரமத்தி, வேலுார், 39; மதுரை விமான நிலையம், நாகை, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி மற்றும் காரைக்காலில், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

தலைப்புச்செய்திகள்