Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு

மே 30, 2022 01:26

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதையடுத்து மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் குமரி மாவட்டத்திலும் மழை நீடித்து வருகிறது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்தது.

நாகர்கோவிலில் இன்று அதிகாலை முதலே விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்படுகிறது. சுசீந்திரம் ஆரல்வாய்மொழி கொட்டாரம் குளச்சல் இரணியல் அடையாமடை ஆணைக்கிணங்கு குருந்தன்கோடு பகுதிகளிலும் இன்று காலையில் மழை நீடித்தது. முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 48.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் அணை நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து திற்பரப்பு அருவி தொடர்ந்து வெள்ளம் கொட்டி வருகிறது. திற்பரப்பு அருவியில் விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கோடை விடுமுறை நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இன்று காலையிலும் அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தக் குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.16 அடியாக உள்ளது. அணைக்கு 602 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
 

தலைப்புச்செய்திகள்