Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்திலும் ரைத்து பந்து திட்டம் அறிவிக்கப்படுமா?

மே 31, 2022 12:19

திருச்சி: விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்பதற்கும், சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை வாங்குவதற்கும் தெலங்கானா மாநிலத்தில் அரசின் வேளாண்மைத் துறை மூலம் ‘ரைத்து பந்து' (RYTHU BANDHU -விவசாயிகளின் உறவினர்) என்ற திட்டம் 2018-19-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் கடந்த ஆண்டுகளில் விவசாயிகளை சாகுபடிக்கு ஊக்கப்படுத்தும் வகையில் குறுவை மற்றும் சம்பா தொகுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டில் ரூ.61.09 கோடிக்கு குறுவை நெல் சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தலா ஏறத்தாழ ரூ.6 ஆயிரம் மதிப்பில் விதைநெல், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியது: விவசாயிகளுக்கு தேவையான அளவுக்குவிதைகள், உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தடையின்றி கிடைக்கவும், அனைத்து சாகுபடி பகுதிகளுக்கும் பாகுபாடின்றி தண்ணீர் கிடைக்கவும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக, தெலங்கானா மாநிலத்தில் செயல்படுத்தப்படும் விவசாய முதலீட்டு ஆதரவுத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு இரு சாகுபடிக்கு ஏக்கருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு கடந்த ஆண்டில் அம்மாநில அரசு ரூ.14,500 கோடி ஒதுக்கியது. இதன்மூலம் விவசாயிகளை கடன் சுமையிலிருந்து விடுவித்து, அவர்கள் மீண்டும் கடனில் சிக்காமல் இருக்கவும், சாகுபடிக்கான முதலீடான விதைகள், இடுபொருட்கள், கூலி உள்ளிட்ட உடனடி தேவைகளை அவர்களாகவே மேற்கொள்ளவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று தமிழகத்திலும் விவசாயிகளுக்கு அவர்களது சாகுபடி சான்றிதழைப் பெற்றுக் கொண்டு முதலீட்டுத் தொகையை அரசு ரொக்கமாகவே வங்கிகள் மூலம் வழங்கினால், விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். மேலும், சிறப்புத் தொகுப்புத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு தேவைப்படாத சில இடுபொருட்களை வழங்கவேண்டியிருக்காது. விவசாயிகளும் முழு அளவில் சாகுபடிப் பணிகளைத் தொடங்க ஏதுவாகும். தமிழக முதல்வர் இதை பரிசீலித்து, தெலங்கானா மாநிலத்தைப் போன்று தமிழக விவசாயிகளுக்கும் முதலீட்டு ஆதரவு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்