Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

1.92 லட்சம் கிலோ மாட்டுச்சாணம் ஏற்றுமதி!

ஜுன் 19, 2022 05:07

சென்னை:  உலகின் பல நாடுகள் இயற்கை விவசாய முறைக்கு திரும்பியுள்ளன. மேற்காசிய நாடான குவைத்தும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள ஒரு நிறுவனம் நம் நாட்டின் ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரில் உள்ள நிறுவனத்திடம் இருந்து மாட்டுச்சாணம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக, 1.92 லட்சம் கிலோ மாட்டுச்சாணம் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அந்த நிறுவனத்தின் இயக்குநர் பிரசாந்த் சதுர்வேதி, "எங்கள் நிறுவனத்தின் கோசாலையில் இருந்து சுங்கத் துறையினரின் மேற்பார்வையில் மாட்டுச்சாணம் உருளைகளில் அடைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மாட்டுச்சாணம் ஏற்றுமதி பற்றி இந்திய இயற்கை விவசாய பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் அதுல் குப்தா, "நம் நாட்டில் இருந்து மாட்டுச்சாணத்தை குவைத் வாங்குவது இதுவே முதன்முறை. உலக அளவில் பல நாடுகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் செலுத்துவதால், இங்கிருந்து மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த 2020 - 2021ஆம் ஆண்டில் மட்டும் 27,155 கோடி ரூபாய் மதிப்புள்ள மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

குவைத்தில் மாட்டுச்சாணத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை உரமிடுவதால் பேரீச்சை விளைச்சல் அதிகரித்து, திரட்சியான பழங்கள் கிடைப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாலத்தீவு, மலேஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து மாட்டுச்சாணம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்