Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்காளர் பட்டியலை வெளியிடுங்கள் 

செப்டம்பர் 11, 2022 10:45

புதுடில்லி:  காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியலை கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும்படி, 'ஜி 23' என அழைக்கப்படும், காங்., அதிருப்தி தலைவர்களில் சிலர் ஏற்கனவே வலியுறுத்தி வருகின்றனர். காங்., தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறப்படும், கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் மணீஷ் திவாரி, சசி தரூர், கார்த்தி சிதம்பரம், பிரத்யுத், அப்துல் காலிக் ஆகிய, காங்., கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.பி.,க்கள், கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவரான மதுசூதன் மிஸ்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:காங்கிரஸ் தலைவர் தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காகத் தான், வாக்காளர் பட்டியலை வெளியிடும்படி கோரிக்கை விடுத்தோம்.

ஆனால், எங்கள் கோரிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர்கள் யார், தலைவர் தேர்தலுக்கு போட்டியிட உள்ளவரை பரிந்துரைப்பது யார் என்பதை அறிந்து கொள்வதற்காகவே, வாக்காளர் பட்டியலை வெளியிடும்படி கூறுகிறோம். வேட்பு மனு தாக்கல் துவங்குவதற்கு முன், வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். பொது வெளியில் வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அனைத்து வாக்காளர்களுக்கும், இது தொடர்பான தகவலை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு நடைமுறையை ஏற்படுத்த வேண்டும். எல்லா வாக்காளர்களும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று, வாக்காளர் பட்டியல் விபரங்களை சரிபார்ப்பர் என கருத முடியாது.

எனவே, தேர்தல் நடைமுறையில் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க வேண்டும்.கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காங்., வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'காங்., தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுவோர், வரும் 20ம் தேதி முதல், கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து வாக்காளர் விபரங்களை அறிந்து கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்