Sunday, 9th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது

அக்டோபர் 12, 2022 02:00

சென்னை;

 சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். 

.அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஷர்மிளா நாகமுத்து என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது உடைமைக்குள் 3 எமர்ஜென்சி விளக்குகள் இருந்தன. அதை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்த போது, அதற்குள் தங்க தகடுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, எமர்ஜென்சி விளக்குகளில் இருந்து ரூ.79 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 808 கிராமுடைய 24 தங்க தகடுகளை எடுத்தனர். 

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக ஷர்மிளா நாகமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் உள்நாட்டு முனையத்திற்கு மும்பையில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே சுங்க இலாகா அதிகாரிகள் உள்நாட்டு முனையத்திற்கு சென்று மும்பையில் இருந்து வந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். இவர்களது உடமைகளை சோதனை செய்த போது. அதில் 27 தங்க கட்டிகள் இருந்தன. 

இதையடுத்து ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 700 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 97 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 508 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்