Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மரவள்ளியில் செம்பேன் பாதிப்பு மேலாண்மை

ஜுலை 05, 2023 11:12

நாமக்கல்: இது குறித்து நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்  கே.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 18000 எக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிர்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பயிரில் தற்போது நிலவிவரும் தட்பவெப்பநிலை மாறுபாட்டினால் செம்பேன் சிலந்தியின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

இந்த செம்பேன் சிலந்திகள் இலைகளின் அடிப்பகுதியிலிருந்து சாறு உறிஞ்சி தாக்குகின்றன.

மேலும் சீதோஷ்ணநிலை மாறுபாட்டினால் இச்சிலந்திகள் அதிக எண்ணிக்கையில் இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் பெருக்கமடையும் போது இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பழுத்து, பின்பு சருகு போல் காய்ந்து உதிர்ந்து விடுகின்றன.

இதில் தீவிர செம்பேன் தாக்குதலுக்குள்ளான செடிகளின் தண்டுப்பகுதிகளில் இலைகள் முற்றிலும் உதிர்ந்து தண்டுப்பகுதி மட்டும் தனித்து காணப்படும். இச்சூழலில் காற்றின் மூலமாக செம்பேன் சிலந்திகள் பரவக்கூடும்.

பெருமழை இல்லாத சமயங்களில் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே கீழ்க்கண்ட பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு செம்பேன் பாதிப்பினை கட்டுப்படுத்தலாம்.முறையான நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். 

களை நிர்வாகத்தின் மூலம் செம்பேனின் மாற்று உணவுப் பயிர்களை அகற்றி வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கீழ்க்காணும் சிலந்திக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றினை தேவைக்கேற்ப 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

மேலும் ஒரு லிட்டர் நீருக்கு நனையும் கந்தகத்தூள் 4 கிராம் அல்லது புரோபர்கைட் 2 மிலி அல்லது பெனசோகுயின் 2 மிலி அல்லது ஸ்பைரோமெசிபன் 1.0 மிலி என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

இதனைத் தொடர்ந்து அனைத்து வட்டாரங்களின் சிறப்பு முகாம்கள் 05.07.2023 லிருந்து நடைபெற உள்ளது. அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்