Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கால்நடை மருத்துவ முகாம்

ஜுலை 22, 2023 01:58

மல்லசமுத்திரம்: கூத்தம்பாளையம் கிராமத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

நாமக்கல் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆவின் நிறுவனம் சார்பாக மல்லசமுத்திரம் ஒன்றியம், கருமனூர் ஊராட்சி கூத்தம்பாளையம்  கிராமத்தில்  கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாபெரும் கால் நடை மருத்துவ முகாம்  நடந்தது.
 
இம்முகாமில், கூத்தம்பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சார்ந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து  தேவையான சிகிச்சைகளை பெற்று சென்றனர்.  கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் கொடுக்கப்பட்டது.

சினை பருவத்தில் உள்ள பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல்கள் செய்யப்பட்டன. சினை பிடிக்காத கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், கால்நடைப்பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி பிரிவின் கேளா ஒலி ஆய்வுக் கருவியின் மூலமாக அளிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து கால்நடை மருத்துவ கல்லூரியின் அறுவை சிகிச்சை பிரிவின் மூலமாக 19ஆண் நாய்களுக்கும், 11பெண் நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. மேலும், கால்நடை பராமரிப்பு குறித்த கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 

கால்நடை மருத்துவக் குழுவினர் கால்நடை விவசாயிகளுக்கு பசுந்தீவன உற்பத்தி மற்றும் தமிழக அரசின்  திட்டங்கள் குறித்த சந்தேகங்களுக்கும், நோய் பரவாமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய  சிறந்த வழி முறைகளை கால்நடை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி அதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

தொடர்ந்து, விவசாயிகள் கருத்தரங்கும் நடந்தது. இந்த கருத்தரங்கில் கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தியில் உள்ள விவசாயிகளின் சந்தேகங்களுக்கு
ஆலோசனைகள்  வழங்கப்பட்டன. 

கிடாரி கன்றுகள் பேரணி நடைபெற்றது, இப்பேரணியில் சிறந்த முறையில் கிடேரி கன்றுகளை பராமரிக்கும் மூன்று விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதன.  மேலும், சிறந்த முறையில் கால்நடைகளை பராமரிக்கும் மூன்று விவசாயிகளுக்கு சிறந்த நடைமுறை விருதுகள் வழங்கப்பட்டன. 20 பயனாளிகளுக்கு தீவன புல் கரணைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

52 கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன. 199 நாட்டுக்கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பயனடைந்தன. 

மேலும் நாமக்கல் மண்டல இணை இயக்குநர் நடராஜன்,  திருச்செங்கோடு கோட்ட உதவி இயக்குநர் அருண்பாலாஜி, கால்நடை நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன், ஆவின் உதவி மேலாண் இயக்குனர்கள் சின்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் மல்லசமுத்திரம் ஆட்மா குழு தலைவர் , கருமனூர் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் செல்வராசு  தலைமையில் முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை திருச்செங்கோடு கோட்ட உதவி இயக்குநர், ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க குழு தலைவர் திருமுருகன், பாலமேடு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர், மரு.ஸ்ரீதர் மல்லசமுத்திர ஒன்றிய கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளரகள், கால்நடை பராமரிப்பு உதவியாள்கள், ஊராட்சிதலைவர்  உள்ளிட்டோர்  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்