Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரும்பு அரவைக்கு பதிவு செய்யாத விவசாயிகள்  பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தகவல்

ஆகஸ்டு 02, 2023 11:32

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா விடுத்துள்ள அறிக்கையில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு ஆண்டு அரவைப் பருவத்திற்கு 2.50 இலட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆலையின் அரவை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இப்பருவத்திற்கு இதுவரை 4270 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டு இதுநாள் வரை ஆலையின் அரவைக்கு பதிவு செய்யாத விவசாயிகள் அந்தந்த பகுதி கோட்ட கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு வருகின்ற 15.08.2023 ஆம் தேதிக்குள் விடுபடாது பதிவு செய்யலாம்.

நாமக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நடப்பாண்டில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 375 எக்டர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொட்டுநீர் பாசனம் மூலம் நடவு செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதத்திலும் அரசு மானியம் வழங்கப்படுகிறது. எனவே, நடவு பருவத்தில் அதிக அளவில் அகலபார் முறையில் 4.5 அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு முன்பதிவு செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசால் நடப்பாண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கு பதிவு செய்யும் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிவிரட்டு மருந்து/எக்டருக்கு 5 லிட்டர் வீதம் 50 சதவிகித மானிய விலை ரூ.2,250/-க்கு வழங்கப்பட உள்ளது.

மேலும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 4 முதல் 5 அடி பாரில் ஒரு ஏக்கரில் நடவு செய்ய தேவைப்படும் 12,500 ஒரு பருசீவல் நாற்றுகள் 50 சதவிகித மானியத்தில் ரூ.12,500/-க்கும் கரும்பு சாகுபடியில் உற்பத்தி செலவினை குறைக்கும் வகையில் ஒரு எக்டருக்கு 2.5 டன்கள் விதைக் கரும்பு மட்டுமே பயன்படுத்தி ஒருபரு விதைக் கரணை மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு எக்டர் ஒன்றிக்கு ரூ.3,750/- மானியமும், கரும்பு இனப்பெருக்க கழகம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் மரபணு விதைக் கரும்பு தருவிக்கப்பட்டு புதியரக விதைக் கரணைகள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே, கரும்பு விவசாயிகள் மேற்குறிப்பிட்ட அனைத்து அரசு திட்டங்களையும், பயன்பெற உரிய ஆவணங்களுடன் முன்பதிவு செய்யுமாறும், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிட், மோகனூர் ஆலையின் அரவைக்கு முழுவதுமாக கரும்பு வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு மோகனூர், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைமை கரும்பு அலுவலக அலைபேசி எண்.94899 00208 ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்