Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொல்லிமலையில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா, கண்காட்சி துவக்கம்

ஆகஸ்டு 03, 2023 11:42

நாமக்கல்: கொல்லிமலையில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா, கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடைத் தன்மையையும் போற்றும் வகையில், ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா ஆக. 2, 3 தேதிகளில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கில், வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி துவக்க விழா நடைபெற்றுது. நாமக்கல் உதவி ஆட்சியர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி விழாவைத் துவக்கி வைத்து வல்வில் ஓரியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வல்வில் ஓரி விழாவில் தோட்டக்கலைத்துறையின் சார்பாக கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் மருத்து மூலிகைப் பயிர்கள் கண்காட்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொட்டானிக்கல்  கார்டனில் அமைக்கப்பட்டுள்ள, மலர் கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் 40,000 வண்ண ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சோட்டா பீம், 15,000 பல்வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர் படுக்கை மற்றும் மலர் அலங்காரம் ஆகியவை கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது.

25,000 ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கங்காரு வடிவம், 20,000 பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முயல் வடிவம், 15,000 பல வண்ண மலர்களால் அமைக்கப்பட்டிருந்த இதய வடிவில் ஆன அமைப்பு, ஆசிய ஹாக்கி சாம்பியன் அடையாளச் சின்னமான பொம்மன் மற்றும் கலைஞர் நூற்றாண்டு சின்னம் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இன்று 3 ஆம் தேதியும் ஓரி விழா தொடர்ந்து நடைபெறும். மாலையில் நிறைவு விழா நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு சமயத்தில் கொல்லிமலை மீதுள்ள பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வர் கோயில் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டும் கடந்த ஜூலை 31 ஆம் தேதி துவங்கி, வருகிற 4 ஆம் தேதி அறப்பளீஸ்வரர் கோயிலில் ஆடி 18 ம் பெருக்கு விழா நடைபெறுகிறது. 

இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து கொல்லிமலைக்கு வரும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மலை மீதுள்ள ஆகாய கங்கை அருவி, நம்ம அருவி, மாசிலா அருவி உள்ளிட்ட அருவிகளிலும், கரை போட்டான் ஆற்றிலும் புனித நீராடி, மலை மீதுள்ள அறப்பளீஸ்வரரை வழிபாடு செய்வது வழக்கம்.

ஆடிப்பெருக்கு விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தியே, கொல்லிமலையில் அரசு சார்பில், வல்வில் ஓரி விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு சமயத்தில் நடத்தப்படுகிறது. 

இந்த நிலையில் ஓரி விழா நேரத்தில் குறிப்பிட்ட சில சமூகத்தினர் இடையே நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தவிர்ப்பதற்காக, இந்த ஆண்டு அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

இதனால் ஆடிப்பெருக்கு நாளில் புனித நீராடுவதற்காக கொல்லிமலைக்கு குடும்பத்துடன் வந்த பக்தர்களும், வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.

தலைப்புச்செய்திகள்