Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் மனு

செப்டம்பர் 24, 2023 12:49

நாமக்கல்: நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் நடைபெற்ற, கருத்துக் கேட்புக் கூட்டத்தில், நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வளையப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நிலம் அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, விவசாயிகளும் பல்வேறு அரசியல் கட்சியினரும் இணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்தததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிப்காட் சம்மந்தமான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ச.உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இதில் சிப்காட் எதிர்ப்பாளர்கள், நிலம் பாதிக்கப்படும் விவசாயிகள், சிப்காட் ஆதரவாளர்கள் ஆகியோர் இடையே தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டன.

இதில் கலந்து கொண்ட பெரும்பாலோனோர் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால், விவசாய நிலங்கள், கால்நடைகள், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவே சிப்காட் அமைக்க கூடாது என கருத்து தெரிவித்தனர். இதனை கவனத்துடன் மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டார்.

பின்னர், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து, ஒரு தரப்பினர் மனு அளித்து விட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியேறிய போது திடீரென, அவர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, வருவாய் கோட்டாட்சியர் சரவணன் ஆகியோர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். 

கலைந்து சென்றவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டன முழக்கங்களை எழுப்பி, சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

சிப்காட் எதிர்ப்புக்குழு சார்பில் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதாலும், அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாலும், கடந்த 2 வாரங்களாக, அவர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. கருத்துக் கேட்புக் கூட்டம்  முடிவுற்ற நிலையில்,  24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கு, மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், என்.புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளில், சிப்காட் எதிர்ப்புக் குழு சார்பில், கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்