Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய வேளாண் சந்தையில் வெல்லம் ஏலம் விட கோரிக்கை

அக்டோபர் 27, 2023 05:24

பரமத்திவேலூர்: தேசிய வேளாண்மை  சந்தையில்,  வெல்லத்தை ஏலம் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமத்தி வேலுார் வட்டாரத்தில் பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து
வருகின்றனர்.

இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள்,விவசாயிகள் வாங்கிச் சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர்.

உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்கெட்டில், சனி மற்றும் புதன்கிழமைகளில் விற்பனை செய்கின்றனர்.

ப.வேலூர் அருகே பிலிக்கல்பாளையத்தில் 13 தனியார் ஏல மண்டிலம் உள்ளது. இங்கே குறிப்பிட்ட சில நபர்களே  வெல்லம் விலையை நிர்ணயம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு, தேங்காய் ஏலம் நடத்துவது போல் வெல்லமும் தேசிய வேளாண்மை சந்தையில் ஏலம் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தனியார் ஏல மண்டிகள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதை கட்டுப்படுத்த முடியும்.

இது குறித்து கரும்பு ஆலை வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறும்போது, ஏல மண்டியில் வெல்லம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விலை போகிறது. ஆனால் வெளி் மார்க்கெட்டில் ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை கடைகளில் விற்பனை ஆகிறது.

விவசாயிகளை விட கமிஷன் ஏஜென்ட்களுக்கும், புரோக்கர்களுக்கும் அதிக அளவில் லாபம் கிடைக்கிறது. வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சொற்ப லாபமே கிடைக்கிறது.

ஒரு சில கரும்பு ஆலை உரிமையாளர்கள்,வெல்லம் தயாரிக்கும் போது  அரசால் தடை செய்யப்பட்ட மலிவான  வேஸ்ட் சக்கரையை 1  கிலோ பத்து ரூபாய்க்கு வாங்கி வெல்லப்பாகில் கலந்து கலப்பட வெல்லத்தை 40 ரூபாய்க்கு விற்கின்றனர்.

கலப்பட வெல்லத்தை சாப்பிடுபவர்களுக்கு வயிற்று உபாதைகள், கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்கள்  ஏற்படும்.

வெல்லம் தயாரிப்பில் கலப்படத்தை தவிர்க்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசு தேசிய வேளாண்மை சந்தையில் வெல்லம் ஏலம் நடத்த வேண்டும் என கூறினர்.

தலைப்புச்செய்திகள்