Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாடு முழுவதும் 6.45 கோடி மரக்கன்றுகள் நடவு அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

அக்டோபர் 31, 2023 06:45

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கீரம்பூர், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு 6,300 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் முன்னிலை வகித்தார். 

 வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு 6,300 மரக்கன்றுகள் நடும் துவக்கமாக, மரம் நட்டு வைத்து, தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் காடு மற்றும் மர பரப்பு  23.70% -ல் இருந்து 33% ஆக அடுத்த 10 ஆண்டுகளில் உயர்த்து வதற்கு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு துவக்கி வைத்தார்.

2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 2.50 கோடி எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அனைத்து அரசு துறைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் 3.14 கோடி எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு நிதி ஆண்டில் (2023-24) மாநிலம் முழுவதும் 6.45 கோடி எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 8.59 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் 12.32 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய மாவட்ட பசுமைக்குழு மூலம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, வனத்துறை மூலம் 7,06,000 மரக்கன்றுகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 54,000 மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

வனத்துறை மூலம் 3.69 இலட்சம் மரக்கன்றுகள் விவசாய நிலங்கள் மற்றும் காப்புக்காடுகளில் நடவு செய்யப்பட்டு வருகிறது.

கீரம்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளி வளாகத்தில் உள்ளூர் மர இனங்களான வேம்பு, புங்கன், பூவரசு, நாவல் மற்றும் புளியன் என 6,300 எண்ணிக்கை இலான பலவகை மரக்கன்றுகள் நடும் விதமாக இன்றையதினம் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர்களுக்கு மரம் வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் கே.இராஜாங்கம்,
செஞ்சிலுவைச் சங்கம் (ரெட் கிராஸ்) சி.ஆர்.ராஜேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் கீரம்பூர் கொங்கு  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மழைத்துளி மண்ணின் உயிர் துளி  " என்பன போல "மரம் நமது உயிர்வளி போன்றது  " என்று கூறி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவை நினைவாக்குவோம் என்று கூறி உறுதிமொழியை ஏற்றனர்.

மேலும் நமது பள்ளி மாணவ, மாணவியர்களும் , அரசு மாதிரிப் பள்ளி மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டு "மரம் நடுவோம் மழை பெறுவோம் "மரம் நடுவோம் உயிர் வளியைப் பெறுவோம்" என்ற முழக்கங்களை யிட்டும், பதாகைகளைக் கையில் ஏந்திவாறு மரம் நடு விழாவில் கலந்துக் கொண்டனர்.

பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர், கல்விக் குழு உறுப்பினர்கள் மற்றும் இரு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .

தலைப்புச்செய்திகள்