Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மண் பரிசோதனை முகாமை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு ஆட்சியர் ச.உமா அழைப்பு

நவம்பர் 08, 2023 08:24

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தலைமையிடமாக கொண்டு வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து மண் வள அட்டையினை அன்றைய தினமே வழங்கப்பட்டு வருகிறது.

மண் பரிசோதனை வாகனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலங்களின் மண்ணில் உள்ள கார - அமிலத்தன்மை மற்றும் தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவு, பயிரிடப்படும் பயிர்களுக்கான உரப்பரிந்துரை மற்றும் பிரச்சனைக்குரிய மண் வகைகளுக்கு மேலாண்மை முறைகள் ஆகியவற்றை மண் மாதிரியினை ஆய்வு செய்து அதற்கேற்ப உரமிட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம்.

நீர் மாதிரியின் கார - அமிலத்தன்மை, கரையும் உப்புக்களின் அளவு, நேர் மற்றும் எதிர் அயனிகளின் அளவு ஆய்வு செய்யப்பட்டு நீரின் வகைப்பாடு மற்றும் நீரின் தன்மைக்கேற்ப சாகுபடி பயிர்கள், பிரச்சனைக்குரிய நீரின் மேலாண்மை முறைகள் தெரிவிக்கப்படும்.

மேலும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் 2023-24 ஆம் வருடத்தில் இதுவரை 75 முகாம்கள் மூலமாக 1,527 மண்மாதிரிகளும் 192 நீர் மாதிரிகளும் ஆய்வு செய்து ஆய்வு முடிவுகள் மண்வள அட்டையாக வழங்கப்பட்டுள்ளன.

ஆய்விற்கு மண்மாதிரியினை விவசாயிகள் தரும் பொழுது அதனுடன் விவசாயின் பெயர் மற்றும் முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், சர்வே எண் மற்றும் சாகுபடி பயிர் ஆகிய விபரங்களை தெரிவித்திட வேண்டும். 

இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் வசந்தபுரத்தில் மண் பரிசோதனை நிலையமும், திருச்செங்கோடு நாராயணபாளையத்தில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகமும் இயங்கி வருகின்றது.

இந்த ஆய்வகங்களை பயன்படுத்தி விவசாயிகள் மண்மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து அதன் முடிவுகளின் அடிப்படையில் உரமிடுமாறும், இரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மண் மற்றும் நீர் மாதிரிக்கு ஆய்வு கட்டணமாக தலா ரூ.20/- செலுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.

இம்மாதத்தில் இனிவரும் வாரங்களில் கீழ்காணும் விபரம் படி சிறப்பு மண்பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது எனவும் அதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வருகின்ற 16.11.2023 வியாழன் இராசிபுரம் கூனவேலம் பட்டி, 22.11.2023 புதன் நாமகிரிப்பேட்டை தொப்பப் பட்டி 30.11.2023 வியாழன் வெண்ணந்தூர் தேங்கல்பாளையம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.

இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்