Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போக்குவரத்து நெரிசலை தடுத்திட நடவடிக்கை எடுக்க விசைத்தறி தொழிலாளர் சங்கம் கோரிக்கை

நவம்பர் 11, 2023 09:54

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சங்க செயலாளர் எம்.அசோகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சங்ககிரி, குமாரபாளையம், போன்ற பகுதிகளை ஈரோடு நகரத்தின் இணைக்கும் மையமான முக்கிய பகுதியாக பள்ளிபாளையம் உள்ளது.

இங்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால், மழை நீர், சாக்கடை நீர் உள்ளிட்டவை குறுகிய சாலையில் அடிக்கடி தேங்கி, சாலைகள் பழுதடைந்து வருகிறது. 

மேலும் வாகனங்கள் ஒழுங்குப்படுத்தி செல்வதற்கு போதிய போதிய ஏற்பாடு இல்லாததால், அவசர தேவைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனமும் உள்ளிட்டவை நெரிசல் ஏற்பட்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

காலை மாலை நேரங்களில், அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. பேருந்துகள் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பில் சிக்குவதால் ,பேருந்து ஓட்டுநர்கள் நேர கட்டுப்பாடு காரணமாக பேருந்து வேகமாக இயக்குகின்றனர். இதனால் விபத்து உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 

எஸ்.பி.பி காலனி உள்ளிட்ட இடங்களில், பயணிகளை ஏற்றி இறக்கிட பேருந்துகள் சமீபகாலமாக நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வணிக வர்த்தக நிறுவனங்கள் கடைவீதிகளுக்கு அதிகளவு பொதுமக்கள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் முன்பை காட்டிலும் தற்போது சாலையில் போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

இனிவரும் நாட்களில் இன்னும் கூடுதலாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

 எனவே போர்க்கால அடிப்படையில் வாகன நெரிசலை சரி செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பள்ளிபாளையம் காவல் நிலையம் சாலையாக உள்ள ஈ.ஆர் தியேட்டர் ரோடு, ஆவரங்காடு சாலை உள்ளிட்டவை குண்டும் குழியுமாக இருப்பதால், சாலையை சரி செய்திட வேண்டும்,  தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் சாக்கடைகளை தூர்வாரி மீண்டும் பள்ளிப்பாளையத்தில்  வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், குறிப்பாக அனைத்து பேருந்துகளும் அந்தந்த பஸ் நிறுத்தத்தில் முறையாக நிறுத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதற்கு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை  எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர்,  வருவாய் ஆய்வாளர் போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு முறையாக மனு வழங்கப்பட உள்ளதாக சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்