Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிப்காட் திட்டம் ரத்து செய்யக்கோரி தோட்டங்களில் 1 லட்சம் பனை விதைகள் விதைப்பு

நவம்பர் 20, 2023 12:12

நாமக்கல்: மோகனூர் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யவேண்டி, இரண்டாம் கட்டமாக, விவசாயத் தோட்டங்களில், 1 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உள்ள, வளையப்பட்டி, பரளி, என். புதுப்பட்டி, ஆண்டாபுரம், அரூர் சுற்றுப்புற பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக, வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சிப்காட் எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இணைந்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிப்காட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தங்களது தோட்டத்தின் வரப்புகளில், பனை விதைகளை விதைக்க முடிவு செய்தனர். அதையடுத்து, அக்., 22ம் தேதி, முதல் கட்டமாக 25 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டது.

தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி, வளையப்பட்டியில் நடந்தது. விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

கொ.ம.தே.க., ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஜ., மாநில விவசாயி அணி செயலாளர் ராதிகா, எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், சரவணன், விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர். ஒரு ஆண்டுக்குள், ஒரு கோடி பனை விதைகள் விதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்