Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தகுதி போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு

நவம்பர் 30, 2023 04:19

நாமக்கல்: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதற்கான தகுதி போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், 2023ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்-தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், 2023-ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைசார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.1.2024 முதல் 31.01.2024 வரை நடைபெற உள்ளது.

இந்தப்போட்டிகளில் சுமார் 5,000 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால், பளு தூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், மல்லக் கம்பு, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், துப்பாக்கிசுடுதல், ஹாக்கி, களரிபயட்டு, கபடி, ஜூடோ, கோ-கோ, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, கட்கா, யோகாசனம், டென்னிஸ், தாங்தா, சிலம்பம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் கூடைப்பந்து, கபடி, கோ-கோ, வாலிபால், ஹாக்கி மற்றும் கால் பந்து ஆகியவற்றிற்கான குழு விளையாட்டுகளில் தமிழ்நாட்டு அணியும் இடம்பெற உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங் கனைகள் அவர்களின் சிறப்பான செயல்திறனின் அடிப்படையில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டு அணிகளில் இட,ம்பெறுவதற்கான தேர்வு சோதனைகள் நவ 31 ஆம் தேதி முதல் டிச 2 ஆம் தேதி சென்னையில்    நடத்தப்படவுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டுப் பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.

பங்கேற்பதற்குத் தகுதி பெற, விளையாட்டு வீரர்கள் வயதுச் சரிபார்ப்பு (1.1.2005 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்) செயல்முறைக்கு, ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பள்ளிக் கல்விச் சான்றிதழ் ( 12ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு) / பிறப்புச் சான்றிதழ் ஆவணங்களில் ஏதேனும் இரண்டினைச் சமர்ப்பிக்கவேண்டும்.

தகுதியுள்ள அனைத்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகளும் தேர்வு சோதனைகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

எனவே, நாமக்கல் மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் -வீராங் கனைகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்