Wednesday, 12th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உயர் அழுத்த மின்சாரம் குறைபாடுக்கு விரைவில் தீர்வு : மேற்பார்வை பொறியாளர் கே.சிவக்குமார் தகவல்

டிசம்பர் 15, 2023 05:53

ராசிபுரம், டிச 15 - ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் உயர் மின் அழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி மின்சாதனங்கள் பழுது ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது விரையில் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கே.சிவக்குமார் குறிப்பிட்டார். 
ராசிபுரம் பகுதியில் மின்சிக்கன வாரவிழாவினை தொடர்ந்து மின் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில்  ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இதில் ரோட்டரி சங்கத் தலைவர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் ஆர்.அனந்தகுமார் வரவேற்றார். இக்கூட்டத்தில் நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கே.சிவக்குமார் , ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினர். இக்கூட்டத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் நகரில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் தோறும் மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான  10 ஆயிரம் ஒட்டுவில்லையை பெற்றுக் கொண்ட மேற்பார்வை பொறியாளர் கே.சிவக்குமார் பேசும் போது, தமிழகத்தின் மின் தேவை தற்போது18 ஆயிரம் மெகா வோல்ட் தாண்டி சென்று கொண்டுள்ளது. மின் தேவைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. சோலார் மின்சக்தி, காற்றாலை மின்சக்தி போன்ற மரபுசாரா மின்சக்தி போன்றவை உற்பத்தி அதிகரிக்க வேண்டும். உற்பத்தி செலவு அதிகம் என்பதால், மின்சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சமுதாயத்தில் அரசு இலவச மின்சாரம் திட்டம் போன்றவையும் செயல்படுத்தி வருகிறது. இது போன்ற நிலையில், மின் சிக்கனம் மிகவும் அவசியமாகிறது. 
தேவையற்ற மின்சார பயன்பாட்டினை தவிர்க்கவே ஆண்டுதோறும் டிச.14 முதல் டிச.20 வரை அரசு மின்சிக்கன வாரம் கடைபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. அதிக உயர் மின் அழுத்தம் கட்டுப்படுத்தும் கருவி ராசிபுரம் மின் நிலையத்தில் இல்லை. இந்த சாதனம் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இது சீரமைக்கப்படும்.  இதன் மூலம் மின் சாதனங்கள் பழுது ஏற்படுவது தவிர்க்கப்படும். 
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இது நடைமுறைக்கு வந்தால் ப்ரீ பெய்டு முறையில் கூட மின்சாரம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றார். இக்கூட்டத்தில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், மின்வாரிய அலுவலர்கள் என பலரும் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்