Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட விழிப்புணர்வு முகாம்

ஜனவரி 13, 2024 03:38

நாமக்கல்: நாமக்கல்லில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் பயிற்சி பட்டறையை, மாவட்ட ஆட்சியர் ச. உமா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் கையேடுகளை
மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வட்டார மைய செவிலியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் குறித்து கலந்துரையாடினர். 

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் உமா, பெண் குழந்தைகளைக காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்மூலம் பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் கிடைக்கும் விழிப்புணர்வுகள், பாதுகாப்பு சட்டங்கள் குறித்து சிறு வயதிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். எனவே சட்டத்தை முழுமையாக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆணும் பெண்ணும் எந்த குழந்தையாக இருந்தாலும் அதனைப் பெற்று சமூகத்தில் நல்லபடியாக, கல்வி அளித்து வளர்க்க வேண்டும். ஆண் பெண் இரண்டு குழந்தைகளுக்குமே ஒரு சமுதாயத்தில் ஒரு பொறுப்பான நிலைக்கு வர வேண்டும். அதற்குப் பெற்றோர் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். 

 குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு உரிய ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளாக இருக்கும் பொழுது பெண்கள் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் ஆரோக்கியமான சமுதாயத்தை படைக்க முடியும். 

நாமக்கல் போன்ற மாவட்டங்களில் அனைத்துத் துறைகளிலும் பெண் அதிகாரிகள் உள்ளனர். பெண்கள் இதுபோன்று அனைத்து துறைகளிலும் உயர்நிலைக்கு வர வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில், இயற்கை மற்றும் யோகா மருத்துவர் பர்வீன் கவ்ஸர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட தாய் செயலாளர் தனலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் பொறுப்பு க. பிரபா உள்ளிட்டோர் பெண் குழந்தைகள் கல்வியின் முக்கியத்துவம் - மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், இளம் வயதில் கருவுற்றல் அதனால் ஏற்படும் பாதிப்புகள், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றிப் பேசினர். 

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வட்டார மைய செவிலியர்கள் கிராம செவிலியர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்