Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஞ்சீபுரத்தில் அத்திவரதரை ஒரே நாளில் 2 லட்சம் பேர் தரிசித்தனர்

ஜுலை 14, 2019 09:10

காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

13-வது நாளான நேற்று அத்திவரதர் பச்சை நிற பட்டாடையில் காட்சி அளித்தார். நேற்று பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலை 2 மணிக்கே அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்று தரிசித்தனர். நேற்று ஒரே நாளில் அத்தி வரதரை 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். காஞ்சீபுரத்தில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா வெங்கையா நாயுடு, தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், சரோஜா, இலங்கை மந்திரி ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் தேர்தல் ஆணையர் சம்பத், நடிகர் விவேக், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் என்.ஆர். சிவபதி உள்பட ஏராளமானோர் அத்திவரதரை நேற்று தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே பக்தர்களின் நலன் கருதி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைப்படி மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் பல்வேறு பன்முக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பக்தர்கள் செல்லும் வழிகளிலும், திருக்கோவிலைச் சுற்றிலும் குடியிருப்பு பகுதிகளிலும் 10 சிறப்பு முகாம்கள், 104 இலவச மருத்துவ உதவி மையம், 108 அவசர கால ஊர்திகள் (6), இருசக்கர அவசரகால ஊர்தி (2) மற்றும் 24 மணிநேரமும் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் கூடுதல் சேவைகளும் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இம்முகாம்களில் அனைத்து வகையான அவசர சிகிச்சைகள் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்வது, பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும் இடங்களிலும் தரமான உணவு தயாரிப்பது போன்றவற்றை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. அத்திவரதர் தரிசனத்துக்காக வரும் பக்தர்களின் நலனுக்காக பல்வேறு பன்முக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்