Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடியுடன் வைகோ சந்திப்பு

ஜுலை 23, 2019 10:50


புதுடெல்லி: பாராளுமன்ற விவாதங்களில் துடிப்பாக செயல்படும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எம்.பி.யாகி இருக்கிறார். எம்.பி. பதவி ஏற்றுக் கொண்ட அவர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது அரசையும் நான் கடுமையாக விமர்சித்து வருபவன். ஆனாலும் அவரை சந்தித்தபோது என்னை அன்போடு வரவேற்றார். இது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. மோடி என்னிடம் நீங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய நபராக இருக்கிறீர்கள்.  ஆனாலும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார். அதற்கு நான் கொள்கையின் அடிப்படையில் இவ்வாறு செயல்படுவதாக தெரிவித்தேன்.

பிரதமரிடம் 3 வி‌ஷயங்களை நான் எடுத்து கூறினேன். நில ஆர்ஜித சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு, ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்களை போலி என்கவுண்டர் மூலம் கொன்ற விவகாரம், நதிகள் இணைப்பால் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கான தீர்வு போன்ற விவகாரங்கள் பற்றி அவரிடம் பேசினேன்.

அதுமட்டுமல்லாமல் தமிழீழ பிரச்சினை பற்றியும் நாங்கள் பேசினோம். நான் யாழ்ப்பாணம் சென்றது, ராஜபக்சே விவகாரம் போன்றவை பற்றியும் பேசினோம். இன்னும் சில வி‌ஷங்களை பற்றியும் விவாதித்தோம். ஆனால் அதைப்பற்றி இங்கு சொல்ல முடியாது. ஆனாலும் அவருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்தது.

ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது சம்பந்தமாக நான் கூறியபோது, இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.  சம்பந்தப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், விவசாயிகளை பாதுகாப்பதின் அவசியம், நதிநீர் இணைப்பு போன்ற வி‌ஷயங்களில் என்னுடைய கருத்துக்களை அவர் ஏற்றுக் கொண்டார். இதில் கிடப்பில் உள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

இவ்வாறு வைகோ கூறினார்.

தலைப்புச்செய்திகள்