Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரள இளைஞர்கள் காரில் கடத்தல்- இருவர் கைது

ஜுலை 27, 2019 06:34

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பணிபுரியும் கேரள இளைஞர்களை கடத்தி பணம் பறிக்க முயன்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த இருவரை தனிப்படையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம், திருச்சூர் கோலங்காட்டுகரா பகுதியைச் சேர்ந்தவர்கள் பினோஜ் (28), அபிஷேக் (28), ஸ்ரீராக் (25), விஷ்ணு (25). இவர்கள் நால்வரும், கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை என்ற மலை கிராமத்தில் உள்ள பினோஜின் அக்கா தீபா என்பவரது
தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், பள்ளங்கி கோம்பை பகுதிக்கு நேற்று வந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார்(23), ராஜபாண்டி(36) மற்றும் அவர்களது நண்பர்கள், பினோஜிடம் முகவரி விசாரிப்பது போன்று பேச்சு கொடுத்துள்ளனர்.

மேலும் தங்களுடன் வந்தால் அதிக சம்பளத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி நான்கு பேரையும் காரில் ஏற்றிக் கொண்டு தேனிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு திடீரென அவர்களை மிரட்டி காரிலேயே அடைத்து வைத்து விட்டு, பினோஜின் அக்கா தீபாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, உனது தம்பி மற்றும் அவரது நண்பர்களை கடத்தி உள்ளோம். ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால்தான் அவர்களை உயிருடன் விடுவிப்போம் என மிரட்டி உள்ளனர் இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா உடனடியாக கொடைக்கானல் போலீஸாரை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார்.

இதையடுத்து கடத்தல்காரர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ. குணசேகரன் ஆகியோரது தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டன. போலீஸார் துரிதமாக விசாரணையில் இறங்கினர். மொபைல் போனில் தொடர்ந்து தீபாவை பேசச் செய்து, கடத்தல்காரர்களின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். இதில் அவர்கள் கொடைக்கானல் மலைப் பிரிவான காட்ரோடு பகுதியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தது. இதில் உசிலம்பட்டியைச் சேர்ந்த
 ராஜாங்கம் மகன் பிரேம்குமார் (23), ஜீவா மகன் ராஜபாண்டி (36) ஆகியோர் போலீஸாரிடம் சிக்கினர். காரில் அடைக்கப்பட்டிருந்த கேரள இளைஞர்கள் நான்குபேரும் மீட்கப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறி முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக  போலீஸார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்