Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் பேய்மழை வெள்ளத்தில் மும்பை தத்தளிப்பு

ஜுலை 28, 2019 04:25

மும்பை: மும்பையில் 10 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கனமழை கொட்டித்தீர்க்க ஆரம்பித்துள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மும்பை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று 1050 பயணிகளுடன் வெள்ளத்தில்  சிக்கியது. பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்ட முயற்சியினால் அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மழை காரணமாக மும்பை - கோவா நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது நேற்றும் தொடர்ந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையால் மும்பை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கின. இதனால் புறநகர் ரயில், வாகன போக்குவரத்து மட்டுமல்லாது, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பல்வேறு நகரங்களில்  இருந்து வந்த விமானங்கள், அண்டை நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

தத்தளித்த ரயில்: நேற்று முன்தினம் இரவு மும்பையில் இருந்து கோலாப்பூர் புறப்பட்டுச் சென்ற மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் தானே மாவட்டம் பத்லாப்பூர் மற்றும் வான்கனி இடையே வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. 15 மணி நேரம் அவர்கள் ரயிலிலேயே தவித்த நிலையில், சம்பவ  இடத்துக்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் சிக்கிய பயணிகள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டனர்.பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் ஈடுபட்டன. மேலும், ஹெலிகாப்டர் மற்றும் கடற்படையின் உதவி கோரப்பட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்புக் குழுவினரின் துரித  நடவடிக்கையால் ரயிலில் இருந்த 1050 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நாசிக் நகரிலும், நாசிக் மாவட்டத்தில் இதர பகுதிகளிலும் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கோதாவரி  ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் அங்கிருந்து முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.நாசிக்கிலும், மாவட்டத்தின் இதரப் பகுதிகளிலும் உள்ள தாழ்வான இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் வாகன போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. 

புனே-மும்பை தேவ்கிரி எஸ்க்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் புனேயில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. அதிகாலை 4.55 மணிக்கு அந்த ரயில் கசாரா மலைத்தொடர் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதை  வழியாக வந்து கொண்டிருக்கையில், தண்டவாளத்தின் குறுக்கே ஒரு பாறை உருண்டு கிடந்ததை டிரைவர் பார்த்தார். உடனே சமயோசிதமாக செயல்பட்டு அவசர பிரேக்கை போட்டு ரயிலை நிறுத்தினார்.டிரைவர் பின்னர் இந்த சம்பவம் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் அந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். பயணிகள் உதவியுடன் பாறை அங்கிருந்து அகற்றப்பட்டது. அந்த ரயில் காலை 6.55  மணிக்கு மீண்டும் தன் பயணத்தை தொடங்கியது. சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்ததால் ரயில்களை வேறு பாதைக்கு திருப்பி விட அவசியம் ஏற்படவில்லை.

தலைப்புச்செய்திகள்