Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூட்டுறவு சங்கத் தேர்தலை எதிர்த்து திருபுவனம் நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுலை 29, 2019 03:46

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் திருபுவனம் (திகோ சில்க்ஸ்) பட்டு மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தின் மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுங்கட்சியினர் தன்னிச்சையாக ஒரு நிர்வாகக் குழுவை நியமித்துள்ளதாக தெரிகிறது.

அதை கண்டித்து இன்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு சுமார் 300 க்கும் மேற்பட்ட அங்கத்தினர்களும், முன்னாள் இயக்குநர்கள் மற்றும் அ.ம.மு.க. வினர் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளுக்குப் புறம்பாகவும், சட்டவிரோதமாகவும், ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் தன்னிச்சையாக அங்கத்தினர்கள் அனுமதியின்றி தேர்தலை நடத்தாமல் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தங்களை அறிவித்துக் கொண்டதைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

எனவே அவர்களை நீக்கி விட்டு மகாசபைக் கூட்டத்தைக் கூட்டி தன்னிச்சையாக அறிவித்துக் கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க.வினர், தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட சுமார் 300 க்கும மேற்பட்ட அங்கத்தினர்கள் பங்கேற்றனர்.

நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர். இதுகுறித்து திகோ சில்க்ஸ் முன்னாள் இயக்குநர் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

தலைப்புச்செய்திகள்