Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பருத்திக்கு கொள்முதல் விலை குறைந்ததால் விவசாயிகள் திடீர் சாலை மறியல்

ஆகஸ்டு 07, 2019 05:17

கும்பகோணம்: கும்பகோணத்தில் கடந்த ஜூன் 2வது வாரத்தில் இருந்து கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி கொள்முதல் நடக்கிறது. புதன்கிழமைதோறும் நடக்கும் கொள்முதலில் வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து 8வது வாரமாக நேற்று கொள்முதல் பணி நடந்தது. இதற்கென 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கும்பகோணம், மற்றும் திருவிடைமருதூர் தாலுகாக்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் குவிண்டால் பருத்தியை கொண்டு வந்திருந்தனர். ஆனால் வியாபாரிகள் 4 பேர் மட்டுமே வந்திருந்தனர். 

அப்போது மறைமுக ஏலத்தின் மூலம் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்திற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை நிர்ணயத்தை விவசாயிகள் ஏற்று கொள்ளவில்லை. இதையடுத்து கண்காணிப்பாளர் தாட்சாயினி மற்றும் வியாபாரிகளிடம் விவசாயிகள் விலை குறைந்ததை பற்றி விவாதித்தனர்.

இப்பிரச்னை தகராறாக மாறியது. குறைவான விலையை ஏற்று கொள்ளாததால் பருத்தியை எடை போட வேண்டாமென விவசாயிகள் முடிவெடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக  சுவாமிமலை மெயின் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கிழக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் விஜயா விவசாயிகளிடம் சென்று விவசாயிகளை சமாதானம் செய்தனர். ஆனால் விவசாயிகள் ஏற்று கொள்ளவில்லை. அதன் பிறகு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் சென்று தஞ்சை மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபுவிடம் பேசினார். அப்போது 8ம் தேதி காலை கோட்டாட்சியர் வீராசாமி முன்னிலையில் வியாபாரிகள், விவசாயிகளை வைத்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுப்போம் என சுரேஷ்பாபு தெரிவித்தார். 

இத்தகவலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் விவசாயிகளிடம் கூறினார். அதனடிப்படையில் மாலை 6.30 மணிக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது.

தலைப்புச்செய்திகள்