Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவுக்கு ஒத்த முதல்வர் எதுக்கு? அவரையும் தூக்கிடுங்க: காங்கிரஸ் கட்சி கோரிக்கை

ஆகஸ்டு 14, 2019 07:29

பெங்களூரூ: கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்று 19  நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அமைச்சர்கள் யாரும் பதவியேற்காததால், கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யும்படி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த பிறகு பாஜகவின் எடியூரப்பா மட்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றார். இதனையடுத்து  அவருடைய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 19 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. பாஜகவில் பலரும் அமைச்சர்களாக எடியூரப்பாவுக்கு நெருக்கடி அளித்துவருவதால், அமைச்சர்களை இறுதி செய்வதில் தாமதம் ஆகிவருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிடக்கூட ஆளுங்கட்சி சார்பில் அமைச்சர்கள் இல்லாததால், அதிகாரிகளே அந்தப் பணிகளைச் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர்கள் இதுவரை பதவியேற்காத நிலையில், இந்த அரசை டிஸ்மிஸ் செய்யும்படி ஆளுநருக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  

இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உக்ரப்பா கூறுகையில், “கடந்த 18 நாட்களாக மாநிலத்தில் ஒரு நபர் அரசு நடந்துவருகிறது. அமைச்சர்கள் பதவியேற்கவில்லை. இந்த மாநிலத்தில் ஆளுநர் என்பவர் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் ஆளுநர் தலையிட்டு எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இது ஆளுநர் ஜனநாயகத்துக்கு செய்யும் நல்லது” என்று தெரிவித்தார்.  

தலைப்புச்செய்திகள்