Tuesday, 11th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

53 வகையான கூடுதல் பணிகள் - ஆசிரியர்கள் திணறல்: மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறி

ஆகஸ்டு 16, 2019 03:05

நெல்லை: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 53 வகையான பணிகளை கூடுதலாக வழங்குவதால் அதையும் முடிக்க முடியாமல் பாடமும் நடத்த முடியாமல் திணறுகின்றனர். தமிழகத்தில் தொடக்கக்கல்வித் துறை இயக்ககத்தின் கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப்பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 

இதற்கிடையே பள்ளிகளில் 

1.ஆசிரியர், ஆசிரியரல்லாதவர் பணிப்பதிவேடு, 2.சம்பளப் பதிவேடு, தற்செயல் விடுப்புப் பதிவேடு, 3.கற்றல் விளைவுகள் பதிவேடு, 4.பாடத்திட்டம், 5.மெல்ல கற்போர் பதிவேடு, 6.கணிதக் கருவிப்பெட்டி பயன்பாட்டுப் பதிவேடு, 7. புத்தகப் பூங்கொத்து பயன்பாட்டுப் பதிவேடு, 8.வாசிப்புத்திறன் பதிவேடு, 9.எளிய அறிவியல் சோதனைப் பதிவேடு, 10.பள்ளி கட்டமைப்புப் பதிவேடு, 11.மாணவர்கள் சுய வருகைப் பதிவேடு, 12.காலநிலை அட்டவணை, 13. ஆரோக்கிய சக்கரம், 14.எழுத்துப்பயிற்சி நோட்டு,15.வரைபட நோட்டு, 16.கட்டுரை நோட்டு, 17. தொலைக்காட்சி ஒளிபரப்பு பதிவேடு, திட்டப் பதிவேடு, 18.அறிவியல் ரெக்கார்டு நோட்டு உட்பட 53 வகை ஆவணங்களை தலைமையாசிரியர் தயாரித்து பராமரிக்க வேண்டியுள்ளது. இதற்கு பெரும்பாலும் இடைநிலை ஆசிரியர்களே உதவுகின்றனர்.

இதுதவிர 1.கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (எமிஸ்) மாணவர், 2.ஆசிரியர் விவரம், தேர்வு விவரம், 3.நலத் திட்டங்கள், 4.பொதுத் தேர்வு மையங்கள் விவரம் உட்பட பதிவேற்ற பணிகளாலும் பணிச்சுமை அதிகரிப்பதால் மாணவர்கள் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் 1.மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2.இலவசப் பொருட்கள் எடுத்து வருதல், 3.எமிஸ் இணையதள பதிவேற்றம், 4.சத்துணவு பராமரிப்பு, 5.பள்ளி விவரங்கள் மேம்பாடு, 6.விளையாட்டு போட்டிகள், 7.விழாக்களுக்கு மாணவர்களை தயார் செய்வது, 8. கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றல், 9.கல்வி உதவித்தொகை தேர்வுகளுக்கு தயார் செய்தல்,10.‘க்யூ.ஆர்.’ கோடு பயன்பாடு என இதரப் பணிகளையும் கவனித்து ஆவணங்களையும் பராமரிக்க வேண்டியுள்ளது.

கல்விமுறையில் பாடத்திட்டம் மாற்றம் உட்பட சீர்திருத்தங்கள் செய்த பின்னர், ஆசிரியர்கள் கற்பித்தலைவிட 53 வகையான ஆவணங்களை தயார் செய்து பராமரிக்கவே நேரமின்றி தவிக்கின்றனர். இதில் 25 ஆவணங்களை மாணவர்கள் திறனுக்கேற்ப ஆசிரியர்கள் தினமும் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் அன்றைய ஆவணங்களை எப்படி முடிக்க வேண்டும் என்ற எண்ணமே மனதில் ஓடுவதால், கவனச் சிதறலில் மாணவர்களுக்கு ஆசிரியர்களால் சரியாக பாடம் நடத்த முடியவில்லை. மாநிலத்தில் 70 சதவீத ஆரம்பப்பள்ளிகளில் ஈராசிரியர்களே உள்ளனர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் 2 பேர்தான் 1 முதல் 5 வரையான வகுப்புகளையும் கவனிக்க வேண்டும்.  மொத்தமுள்ள 23 பாடங்களையும் நடத்த வேண்டும். இதில் ஆவணங்களையும் தயாரிப்பது பெரும் சவாலாக உள்ளதால் வாரத்தில் 2 நாட்கள் பாடம் நடத்தவே சிரமப்படுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்