Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெலுங்கானாவில் 460 கிராமங்கள், 2 நகரங்கள் மாயம்

ஆகஸ்டு 24, 2019 05:36

ஐதராபாத் : தெலுங்கானாவில் 460 கிராமங்கள் மற்றும் 2 நகரங்களின் பெயர்கள் அரசு குறிப்பேட்டில் இருந்து மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் 2021 ம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் ஆந்திரா - தெலுங்கானா பிரிக்கப்படுவதற்கு முன்பு, தெலுங்கானா பகுதியில் இருந்த 460 கிராமங்கள் மற்றும் 2 நகரங்களின் பெயர்கள் அரசு குறிப்பேட்டில் இருந்து காணாமல் போய் உள்ளது தெரிய வந்துள்ளது. மத்திய உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சகமும், மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகமும் 2011 மக்கள்தொகை புள்ளிவிபரத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், தெலுங்கானாவில் இருந்து இப்பகுதிகள் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த 460 கிராமங்களும், 2016 அக்டோபரில் தெலுங்கானா அரசு பொறுப்பேற்று மாவட்டங்கள் பிரிக்கும் போது உருவாக்கப்பட்ட 14 புதிய மாவட்டங்களின் கீழ் வருகின்றன. இத்தனை கிராமங்கள் மாயமாகி இருப்பது பற்றி விளக்கம் அளிக்கும்படி தெலுங்கானா அரசிடம், மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் கேட்டுள்ளது.

மகபூப்நகர், ரங்காரெட்டி மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களே அதிக அளவில் மாயமாகி உள்ளன. இதில் மாயமான கிராமங்களை உள்ளடக்கிய 58 மண்டலங்கள் அரசு நலத்திட்டங்களை தொடர்ந்து பெற்று வந்துள்ளது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மாயமான கிராமங்களில் 36 கிராமங்களின் பெயர்கள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு பட்டியலிலும் இடம்பெறவே இல்லை என்பது அதிகாரிகளை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மண்டல மற்றும் கிராம எல்லை வரையறையின் போது ஏற்பட்ட குழப்பம் காரணமாக வருவாய் அதிகாரிகள் அந்த கிராமங்களின் பெயர்களை விட்டு விட்டதாக மூத்த அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். நிஜத்தில் இருக்கும் இந்த 460 கிராமங்கள் மற்றும் 2 நகரங்களின் பெயர்கள் அரசு பதிவேட்டில் இருந்து விடுபட்டது அல்லது நீக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


 

தலைப்புச்செய்திகள்