Sunday, 19th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

செப்டம்பர் 03, 2019 02:47

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் இந்த மழை அதிகாலையிலும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 

இந்த மழை காலை வரை நீடித்தது. இதனால், சென்னை நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: வடமேற்கு வங்கக்கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், அரியலுார், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, துாத்துக்குடி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலுார், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்